Thursday, December 19, 2013

குறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் ! - புதிர் கதை

வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.

வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டதினாலும், பயணத்தில் களைப்பு அடைந்திருந்ததினாலும், அவன் அந்தச் சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து, மறுநாள் பயணத்தைத் தொடரலாம் என்று முடிவு செய்தான்.அதனால் குதிரையை விட்டிறங்கி, சத்திரத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் குதிரையைக் கட்டினான்.பிறகு அது உண்ணுவதற்காக புல் போட்டுவிட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான்.


அப்போது அங்கிருந்து குறும்புக்கார வாலிபன் ஒருவன், குதிரையின் வாலைப் பிடித்து இழுத்து விளையாட ஆரம்பித்தான்.சத்திரஹ்துக்குள் நுழைந்தவன் இதைப் பார்த்ததும், திரும்பிவந்து, "தம்பி, இது முரட்டுக் குதிரை.வலைப்பிடித்து இழுத்தால் அது கோபம் கொண்டு உதைக்கும். அது உதைத்தால் உனது பற்கள் எல்லாம் உடைந்துபோகும். அதனால் குதிரையுடன் விளையாடாதே" என்று எச்சரித்து விட்டுப் போய்விட்டான்.

ஆனால் அந்தக் குறும்பனோ அவன் கூறியதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தனது விளையாட்டை மீண்டும் தொடர்ந்தான்.வாலைப் பிடித்து இழுத்ததினால் கோபம் கொண்ட குதிரை, ஓங்கி ஒரு உதை கொடுத்தது. அது சரியாக அவனது முகத்தில் பட்டு, நான்கு குட்டிக் கரணங்கள் போட்டு விழுந்தான். அவனது முன்பற்கள் எல்லாம் சிதரியது. முகத்திலும் காயம் ஏற்பட்டு வலி பொறுக்க முடியாமல் கூக்குரலிட்டான்.

"இந்த அநியாயத்தைக் கேட்பார் யாரும் இல்லையா?" என்று கூச்சலிட்டதைக் கேட்டு அங்கே கூட்டம் கூடிவிட்டது. ஊர்க்
காவலர்களும் வந்தார்கள்.என்ன நடந்தது என்று கேட்டதற்கு, " நான் ஒன்றுமே செய்யவில்லை. இந்தக் குதிரையின் பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது இந்த முரட்டுக் குதிரை என்னை உதைத்துவிட்டது. எனது பற்களும் உடைந்து விட்டது. இப்படிப்பட்ட முரட்டுக் குதிரையை அனைவரும் நடக்கும் இடத்தில் கட்டி வைத்தது குதிரைக் காரனின் குற்றம். அதனால் அவன் எனக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும். அல்லது அவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்" என்று புலம்பினான்.

கவலர்கள் அவனை அந்த ஊர் நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அவனும் நீதிபதியிடம் தனது வழக்கைக் கூறினான்.
நீதிபதி குதிரைக்காரனை வரவழைத்தார்.அவனைப் பார்த்து, " ஐயா...இந்தக் குதிரை உன்னுடையதுதானா?" என்று தனது முதல் கேள்வியைக் கேட்டார்.குதிரைக்காரன் ஒன்றுமே பதில் பேசாமல் அமைதியாக நின்றான்.

மீண்டும் அவனிடம்" உன் குதிரையால்தான் இவனுக்கு இவ்வளவு காயமும், பற்களும் உடைந்துள்ளது. இதற்கு நீ என்ன கூறுகிறாய்" என்று நீதிபதி கேட்டார்.அப்போதும் அவன் பதில் பேசவில்லை.

அதைக் கண்ட நீதிபதி, " இவன் செவிட்டு ஊமை போல் தெரிகிறது.என்ன கேட்டாலும் அவனுக்குப் புரியவில்லை. அதனால் எப்படி வழக்கைத் தொடர்ந்து நடத்துவது" என்று கூறினார். 

உடனே அந்தக் குறும்பன் நீதிபதியைப் பார்த்து சில விஷயங்களைக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட நீதிபதி, கொஞ்சம் ஆலோசித்துவிட்டு, தவறு உன்னுடையதுதான். அதனால் அவர் நட்ட ஈடு எதுவும் தரவேண்டியதில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

மன்ற நண்பர்களே........அந்த குறும்புக்கார வாலிபன் என்ன கூறியதற்கு நீதிபதி இப்படித் தீர்ப்பு கூறினார்? 

புதிர் விடை : 

குதிரைக்காரன் ஊமை என்று எல்லோரும் சொல்லக் கேட்ட அவசரக்கார குறும்பன் "நீதிபதி அய்யா, அவன் ஒன்றும் ஊமை இல்லை, என்னிடம் குதிரை வாலை இழுத்தால் உதைக்கும் என்றான், ஆகையால் அவன் ஒன்றும் ஊமை இல்லை" என்றோ அல்லது "அவன் குதிரையை மரத்தில் கட்டியதும் என்னிடம் பேசினான்" என்றோ உளறி இருப்பான்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்