Tuesday, December 24, 2013

காற்று நுழைய முடியாத கண்ணாடி அறை - புதிர்

உங்களை ஒரு சதுரமான அறைக்குள் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிவிடுகின்றார்கள்.. அந்த அறைக்கு சன்னல்கள் எதுவுமே இல்லை...........மூச்சு விடவே கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த அறையைக் கொஞ்சம் பார்ப்போமா? 

அந்த அறையின் மேல் கூறை அதாவது சீலிங் முழுவதும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. நான்கு பக்கச் சுவர்கள் முழுவதுமே அதே போலவே கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. பற்றாக் குறைக்கு தளமும் கண்ணாடிதான். அந்த அறைக்குள் வேறு எதுவுமே இல்லை.


நீங்கள் கிழக்கு பக்கமாக நின்றுகொண்டு எதிரில் உள்ள சுவறைப் பார்க்கின்றீர்கள்.
இப்போது உங்கள் கண்களுக்கு உங்கள் பிம்பங்கள் எத்தனை பிரதிபலிக்கும்????

கண்ணாடி என்று சொல்லிவிட்டேன். அது எப்படிப்பட்ட கண்ணாடி என்று அடுத்தாற்போல் நீங்கள் கேள்வியை எழுப்புவீர்கள் என்று தெரியும். அதனால் விளக்கமாக நானே கூறிவிடுகின்றேன்.

பின்னால் பாதரசம் பூசப்பட்ட பிரதிபலிக்கும் [ முகம் பார்க்கும் கண்ணாடிபோல] கண்ணாடிதான்.

நன்பர்களே.............இப்போது எனது கேள்விக்கு பதிலைக் கூறுங்களேன்!!!!!

புதிர் விடை :


"அறையில் ஒரு கதவைத் தவிர எதுவுமே இல்லை.அந்தக் கதவும் பூட்டப்பட்டுவிடுகின்றது.மூச்சுவிடக் கூட சிரமம்"

அறையின் உள்ளே நான்கு புறங்களிலும் சுவர். அதுவும் கண்ணாடிச் சுவர்....மேலேயும், கீழேயும் அதுபோலவே கண்ணாடிச் சுவர். உள்ளே நுழைந்ததும் கதவு பூட்டட்டப்படுகின்றது. வேறு சண்ணலும் கிடையாது. 

ஆக அந்த அறைக்குள் வெளிச்சம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அதனால்தான் மூச்சு விடுவதற்குக் கூட சிரமம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது புதிருக்கான விடையைப் பார்ப்போம்.
எந்த ஒரு பிம்பமுமே...ஒளி இல்லாவிட்டால் பிரதிபலிக்காது.
அதனால் நீங்கள் அந்த அறையின் உள்ளே சென்று கதவு பூட்டப்பட்டதும், உங்களால் எந்த பிம்பத்தையுமே பார்க்க இயலாது.

பவளத்தீவு அரசன் மணிமாறன் மற்றும் அவனது மந்திரி மதியழகன் - புதிர் கதை

முன்னொரு காலத்தில் பவழத்தீவை மணிமாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.அந்த அரசனுக்கு, மதியழகன் என்ற அமைச்சனும் இருந்தான்.ஒரு நல்ல நாளில் அரசனுக்கும் , பக்கத்து நாட்டு இளவரசிக்கும் திருமணம் நடந்தது.....திருமணம் முடிந்தபிறகு, ஆட்சிப் பொருப்பை முழுவதுமாக அமைச்சன் மதியழகனிடம் ஒப்படைத்துவிட்டு அரசன் அந்தப்புரமே கதியாகக் கிடந்தான்.  

ஆனால் நாட்டு மக்களோ அமைச்சன் மதியழகனது சூழ்ச்சியால்தான் அரசன் ஆட்சிப் பொருப்பைக் கவனிக்காமல் இருப்பதாக பேசிக்கொண்டார்கள்.நல்லவனான அமைச்சன் இதை அறிந்தான். வருந்தினான்....அரசனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து நல்லாட்சி நடத்தவைக்க என்ன வழி என்று ஆலோசனை செய்தான்.


முடிவில், அரசனிடம் சென்று, " அரசே நான் புனிதப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். நான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும். எனக்கு விடை கொடுங்கள். " என்றான்.

அரசன் எவ்வளவோ வற்புறுத்தியும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத அமைச்சன் புனிதப் பயணம் புறப்பட்டான்.நம்பிக்கைக்கு உரியவர் வேறு யாரும் இல்லாததினால், அரசனன்று முதல் ஆட்சியைக் கவனித்தான். மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்..

பயணம் புறப்பட்ட அமைச்சன் மதியழகன், பல ஊர்களைக் கடந்து, ஒரு துறை முகத்தை அடைந்தான். அங்கிருந்த கப்பலில் ஏறிக்க்கொண்டு வேறு நாட்டுக்குப் பயணம் தொடங்கினான்.

கப்[பல் நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது, சிறிது தொலைவில் நீர்ப் பரப்பின் நடுவே இருந்து ஒரு மரம் மேலே ந்ழும்பியது.அந்த மரத்தின் கிளையில் ஒரு பேரழகு வாய்ந்த பெண் ஒருத்தி அமர்ந்துகொண்டு யாழ் மீட்டிப் பாடினாள். மிக இனிமையாகப் பாடினாள். அமைச்சன் வியப்புடன் அந்த அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்தப் பெண் மரத்துடன் நீருக்கு அடியில் சென்று மறைந்துவிட்டாள்.இதைக்கண்டு வியப்படந்த அமைச்சன் , கப்பல் தலைவனிடம் இது பற்றிக் கேட்டான்.

அதற்கு கப்பல் தலைவன், " இந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும் நாங்கள் காணும் அதிசயக் காட்சி இது. எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்று" என்றான்.அதன் பிறகு பல நாடுகளைச் சுற்றிவிட்டு தனது பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சன் நாடு திரும்பினான்.. அவனை அன்புடன் வரவேற்ற அரசன் நீண்ட நாள் பிரிவை, பலவகையாகப் பேசி தீர்த்துக்கொண்டான். அதன் பிறகு அமைச்சனிடம், அவன் பல நாடுகளுக்கும் சென்றபோது, அங்கே ஏதாவது அதிசயத்தைக் கண்டதுண்டா? என்து கேட்டான்.

அதற்கு அமைச்சன் எதையும் மறைக்காமல், தான் கடலின் நடுவில் கண்ட அற்புத மங்கையைப் பற்றிக் கூறினான். அதைக் கேட்ட அரசன் தான் எப்படியாவது அந்தப் பெண்ணைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அமைச்சனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு கப்பலில் ஏறி பயணம் செய்தான்.

அந்தக் குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும், வழக்கம்போல் கடலின் உள்ளே இருந்து மரம் வெளிப்பட்டது. அழகு மங்கை யாழ் இசைத்துக்கொண்டிருந்தாள்.உடனே அரசன் கப்பலை விட்டுக் கடலில் குதித்தான். நீந்திச் சென்று அந்தப் பெண் இருந்த மரத்தில் ஏறினான்.அரசன் மரத்தில் ஏறியதும், அவனையும் சேர்த்து கடலின் உள்ளே மூழ்கிய மரம், கடலின் ஆழத்தில் இருந்த ஒரு குகைக்குக் கொண்டு போனது.யாழ் மீட்டிய நங்கையைப் பார்த்த அரசன் , தான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிவிட்டதாகவும், தான் அரசன் என்றும் , அவளை மணம் புரிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினான்.

அதற்கு அவள், " அரசனே,,,,நான் தேவலோகத்து மங்கை. ஒரு சிறிய தவறிழைத்துவிட்டதால் ஏற்பட்ட சாபத்தில் இப்படி நீருக்கடியில் வாழ்கிறேன்.தினமும் ஒருமுறை வெளியே வந்து யாழ் மீட்டுவேன். அப்போது யாராவது துணிவுடன் என்னை அனுகினால், அவரையே மணம் செய்து இரண்டு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்துவிட்டு, மறுபடியும் தேவலோகம் சென்றுவிடுவேன்.இதுதான் எனது சாப விமோசனம். இப்போது தாங்கள் வந்துவிட்டீர்கள். விரைவில் எனக்கு விமோசனம் கிடைத்துவிடும்� என்றாள்.

அரசனும் அவளை மணந்தான். தனது நாட்டுக்கு அழைத்துவந்தான். அவளுடன் அரசன் மகிழ்வுடன் வாழ்ந்தான். மறுபடியும் அமைச்சனையே ஆட்சியைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அரசன் அந்தப்புரமே கதியாகக் கிடந்தான். அவளது சாப விமோசன நாளும் வந்தது. அவளை அழைத்துச் செல்ல தேவ குரு வந்தார். அரசன் அவள் மேல் கொண்டுள்ள காதலைக் கண்டு, இரக்கப்பட்டு, அரசனது ஆயுட் காலம் முழுவதும் அவள் அங்கேயே தொடர்ந்து இருக்க அனுமதி அளித்தார். அரசி தேவலோகம் செல்லப்போவதை எண்ணி மனக்கவலை அடைந்திருந்த அரசனும், நாட்டு மக்களும் இதைக் கேட்டு அளவில்லாத மகிழ்வடைந்தார்கள்.

ஆனால் அந்த அமைச்சன் மதியழகன் அன்று இரவே தற்கொலை செய்துகொண்டான்.அனைவரும் மகிழ்வடைந்தபோது, அமைச்சன் மட்டும் மனம் வெதும்பி தற்கொலை செய்துகொண்டது ஏன்?

புதிர் விடை :

தேவலோக மங்கை வாழ்நாள் முழுவதும் அரசனோடு இருக்கலாம் என்பதால் இனிமேல் அரசன் அந்தபுரத்தை விட்டு எந்த புறமும் போகமாட்டார். அமைச்சர் மதியழகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அங்கே சந்தோசமாக இருப்பார்.

ஆனால் மக்கள் மதியழகனைத் தான் பழிப்பார்கள், எல்லாம் மதியழகனால் வந்தது, அவரால் தான் அரசனுக்கு தேவலோக மங்கை கிடைத்தார், அரசன் அந்தபுரத்திலேயே அடங்கி கிடக்கிறார் என்று தூற்றுவார்கள். மேலும் மதியழகன் இல்லை என்றால் கண்டிப்பாக அரசன் ஆட்சியை ஏற்று நடத்துவார் என்பதால் மனம் வெம்பி தற்கொலை செய்து கொண்டார்.

கருப்பசாமியும், கண்ணம்மாளும் ! - புதிர்

கருப்பசாமியும், கண்ணம்மாளும் கணவன் மனைவி. இரவு 9 மணிக்கு ஹாலில் அமர்ந்திருந்தார்கள். கருப்பசாமி தொலைக்காட்சியில் மெட்டி ஒலி  தொடர் பார்த்துக் கொண்டிருந்தான்.கண்ணம்மாள் ஏதோ முக்கியமாகப் படித்துக்கொண்டிருந்தாள். 

திடீரென்று மின்சாரம் நின்றுபோகவே வீட்டில் இருள் சூழ்ந்தது. 

கருப்பசாமி தொலைக்காட்சித் தொடர் பார்க்க இயலாமல் போனதால் வீட்டின் உள்ளே சென்று மெழுகுவர்த்தியோ அல்லது வேறு விளக்கோ கிடைக்குமா என்று பார்த்தான்.


எதுவுமே கிடைக்கவில்லை. சரி படுத்துத் தூங்கவாவது செய்யலாம் என்று கண்ணமாளை அழைத்தான்.படிப்பதை நிறுத்திய அவள், தான் வரவில்லை என்றும் படிக்கவேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது என்றும், முழுதும் படித்தபிறகு வந்து படுத்துக்கொள்வதாகவும் கூறினாள்.

சரி என்று கருப்பசாமி போய்ப் படுத்துக்கொண்டான்.

கண்ணம்மா புத்தகம் முழுவதும் வாசித்தபிறகுதான் போய்ப் படுத்தாள்.

நண்பர்களே மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த அறையில் இது அவளுக்கு எப்படி சாத்தியம் ஆனது?

புதிர் விடை :

அவர் கண் பார்வையற்றவராக இருந்திருக்க வேண்டும் , பிரெய்லி முறையில் படித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

ஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி ! - புதிர் கதை

ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். 

ஒருநாள் அவனது நண்பன் ஒருவன் அங்கு வந்தான். வந்தவன் வருமையில் வாடும் அவனது நிலையைக் கண்டு, " நண்பனே....ஏன் இப்படி இங்கேயே இருந்து வருமையில் வாடுகிறாய்?.உன்னைப் போன்ற உண்மையாக உழைக்கும் தொழிலாளிக்கு பக்கத்து நாட்டில் நல்ல மரியாதையும், வருமானமும் கிடைக்கிறது.ஒரே வருடத்தில் கைநிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு திரும்பிவிடலாம். " என்றான்.

அதைக் கேட்ட அவனும், தனது மனைவி மக்களை உறவினரிடம் ஒப்படைத்துப் பார்த்துக்கொள்ளும்படி கூறினான். பிறகு பக்கத்து நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.

அங்கே அவனுக்கு நகரின் தெருக்களைத் தூய்மை செய்யும் பணி உடனே கிடைத்தது.மாதத்துக்கு இரண்டு பொற்காசுகள் சம்பளமும், இருக்க இடம் மற்றும் உணவும் அவர்களே வசதி செய்து கொடுத்தார்கள்.அவ்ஙே வசித்தவர்களும் அவ்வப்போது அவனுக்கு அன்பளிப்புகள் கொடுத்தார்கள்.. அதனால் சிலா மாதங்களுக்குள், அவன் பத்து பொற்காசுகள் சேர்த்துவிட்டான். நூறு பொற்காசுகள் சேர்ந்ததும் தன் நாட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்திருந்தான். ஆனால் பத்து பொற்காசுகளை கையில் வைத்திருப்பது அவனுக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை. அதனால் நம்பிக்கையான யாரிடமாவது பொற்காசுகளைக் கொடுத்து வைக்கலாம் என்று முடிவு செய்தான்.


அந்த ஊரில் ஒரு நீதிபதி இருந்தார். அவரிடம் கொடுத்துவைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து . அவரிடம் சென்று பத்து பொற்காசுகளைக் கொடுத்து, மேலும் சேமிக்கும் பணத்தையும் அவ்வப்போது தருவதாகவும், தான் நாட்டுக்குப் போகும்போது மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டான். நீதிபதியும் சரி என்று வாங்கிக்கொண்டார்.


மேலும் சில மாதங்கள் கழிந்தன. கடுமையான உழைப்பின் பயனாக விரைவிலேயே நிறைய பொற்காசுகள் சேமித்தான். மனதில் கணக்குப் போட்டுப் பார்த்து நூறு பொற்காசுகள் சேர்ந்திருக்கும் என்று தெரிந்ததும், தனது நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தான். நீதிபதியிடம் சென்றான். தான் சேமித்து வைத்த பொற்காசுகளைக் கொடுத்தால் தான் நாடு செல்வதாகக் கூறினான்.


நீதிபதியின் மனதில் சாத்தான் புகுந்துகொண்டான்,அவனை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்து, அவனை ஏற இறங்கப் பார்த்து , " எந்தப் பணத்தை நீ என்னிடம் கேட்கிறாய்"? என்றார். அதற்கு அவன் " ஐயா....நான் தங்களிடம் சிறுகச் சிறுகக் கொடுத்துவைத்திருந்த பணம்தான் " என்றான். அவரோ கோபம் கொண்டு, " ஏய்.....நீ என்னிடம் எந்தப் பணமும் கொடுக்கவில்லை. உனக்கென்ன புத்தி பேதலித்துவிட்டதா????....நீயாக ஓடிவிடு, இல்லையென்றால் வேலைக்காரர்களை அழைத்து உன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்" என்றார்.

இதைக் கேட்டதும் அவனுக்கு உலகமே இருண்டது. வேலியே பயிரை மேய்ந்தால் தான் யாரிடம் சென்று முறையிடுவது என்று புலம்பியபடி சோகமாக வேலைக்குத் திரும்,பினான்.வழக்கமாக அவன் சுத்தம் செய்யும் தெருவில் இருந்த ஒரு பெண்மணி அவன் சோகமாக இருப்பதைக் கண்டு, என்ன விபரம் என்று விசாரித்து, நீதிபதி அவனை ஏமாற்றிய விஷயத்தைத் தெரிந்துகொண்டாள். அவன்மீது இறக்கம் கொண்ட அவள் " ஐயா அழவேண்டாம்.....கவலைப்படாமல் இருங்கள். இன்று மாலை நான் நீதிபதியின் வீட்டுக்குள் செல்வேன். நீங்கள் சிறிது நேரம் கழித்து அங்கே வந்து, நீதிபதியிடம் நான் உங்களிடம் கொடுத்து வைத்திருந்த நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுங்கள் நான் ஊருக்குப் போகவேண்டும் என்று கூறுங்கள்.. அவர் கண்டிப்பாகத் தருவார்.நூறு பொற்காசுகளுக்குப் பதிலாக நூற்றைம்பது பொற்காசுகளுடன் நீங்கள் உங்கள் ஊருக்கு மகிழ்வுடன் செல்லலாம்" என்றாள்.

மாலை நேரம் வந்தது.அந்தப் பெண்மணி நீதிபதியின் வீட்டுக்குள் நுழைதாள். அவளைக் கண்ட நீதிபதி, " அம்மணி நீங்கள் யார்?. என்னால் உங்களுக்கு எதுவும் ஆகவேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அவளும் தலையசைத்து, ஆமாம் என்று கூறி, தனது கணவன் வெளியூர் சென்றிருப்பதாகப் பேச ஆரம்பித்தவள் மேலும் சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தாள்.

அப்போது ஏழைத் தொளிலாளி உள்ளே வந்தான். வந்தவன் நீதிபதியைப் பார்த்து, " ஐயா, நான் கொடுத்த நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுங்கள் நான் ஊருக்குச் செல்லவேண்டும்" என்றான்.அவன் நூற்றைம்பது பொற்காசுகள் என்று சொன்னதும் முதலில் கடும் கோபம் அடைந்தாலும், சாமர்த்தியமாக அதைப் புண்ணகையால் மறைத்துக்கொண்டு, " அடடே....நீ காலையிலேயே சொன்னாய் அல்லவா?....இதோ உள்ளது உனது பணம்" என்று அவன் கேட்டபடியே நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினார்.

அப்போது ஒருவன் உள்ளே வந்தான்...."அம்மா.... வெளியூர் சென்றிருந்த உங்கள் கணவர் வந்துவிட்டார். உங்களைக் கூப்பிட்டு வரச்சொன்னார்" என்றான்....அவளும் நீதிபதியைப் பார்த்து, " ஐய்யா எனது கணவர் வந்துவிட்டார்....உங்களை அடுத்து அவசியம் ஏற்படும்போது வந்து பார்க்கிறேன்" என்று கூறியபடி சென்றுவிட்டாள்.

நீதிபதி தலையில் துண்டைப் போட்டபடி மிகவும் வருத்தத்துடன் அமர்ந்துவிட்டார்.

நண்பர்களே.....அந்தப் பெண்மணி நீதிபதியிடம் அப்படி என்னதான் கூறினாள்?. ஏழைத்தொளிலாளி தான் கொடுத்து வைத்திருந்ததைவிட அதிகமாகவே கேட்டும் ஏன் அவனுக்கு உடனே கொடுத்து அனுப்பினார்.

புதிர் விடை :

அந்த பெண்மணி நீதிபதியிடம் சென்று, அய்யா, என் கணவர் வெளியூர் சென்றிருக்கிறார், அவர் என்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்ன 1000 பொற்காசுகளை உங்களிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்க நினைக்கிறேன், அவர் வந்ததும் நீங்கள் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லியிருப்பார்.

அதே நேரத்தில் நம்மவர் வந்து 150 பொற்காசுகள் கேட்க, அதை கொடுக்கவில்லை என்றால் இந்த பெண்மணி தன்னை நம்ப மாட்டார் என்று நினைத்து அவர் கேட்ட 150ஐ கொடுத்து விட்டார்.

மாறுவேடத்தில் அரசனும் , ஒரு காவலாளியும் அவனது மர வாளும் ! - புதிர் கதை

ஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த காவலாளி ஒருவனைக் கண்டார்.....அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.மிகவும் கலகலப்பாகவும் சாதுர்யமாகவும் பேசிய அவன் மேல் அரசர் ஈடுபாடு கொண்டார். 

வந்திருப்பது அரசன் என்று அறியாமல், கொஞ்ச நேரம் பேசியதும் அந்தக் காவலாளி, " நாம் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.இந்த நல்ல பொழுதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.வாருங்கள் பக்கத்தில் உள்ள மதுக்கடைக்குப் போய் மது அருந்துவோம்" என்றான்.

அதற்கு மாறுவேடத்தில் இருந்த அரசர், " பாதுகாவல் பணி புரியும் நீ, அதை விட்டுவிட்டு, மதுக்கடைக்குப் போகலாம் என்கிறாயா?....ஏதேனும் நடந்துவிட்டால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்வாயே"? என்றார்.


அதற்கு அவன், " ஒன்றும் நடக்காது. பக்கத்தில்தான் மதுக்கடை உள்ளது.இந்தத் தெருவில் சிறிய சப்தம் கேட்டால்கூட, நான் உடனே வரமுடியும். அதனால் வாருங்கள் போகலாம்" என்றான்.

அரசனும் அவனுடன் சென்றார். முதன்முறை இருவரும் சிறிதளவு குடித்தார்கள். மேலும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காவலாளிக்கு ஏற்பட்டது.ஆனால் அவனிடம் பணம் போதுமானதாக இல்லை.அதனால் தனது உடைவாளை இடுப்பில் கட்டியிருந்த உறையில் இருந்து எடுத்து மதுக்கடைக்காரனிடம் கொடுத்து , " இதை ஈடாக வைத்துக்கொண்டு மேலும் மது கொடுங்கள். காலையில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு வாளை வாங்கிக் கொள்கிறேன்" என்றான். அதற்கு கடைக்காரனும் சம்மதித்து, வாளைப் பெற்றுக்கொண்டு மது வகைகளைக் கொடுத்தான்..அதைக் கண்ட அரசர், " இது தவறல்லவா?..ஏதேனும் அவசரம் என்றால் வாள் இல்லாமல் நீ என்ன செய்வாய்" என்று கேட்டார்.

அதற்கு அவன், சிரித்தபடி பக்கத்தில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து, வாள் போலச் செய்து வாள் உறையில் வைத்துக்கொண்டே"அந்த வாளுக்குப் பதிலாக இந்த மரவாள் ஒன்றை வைத்துக்கொண்டே நிலைமையை நான் சமாளிக்கமுடியும். நீங்கள் கவலைப்படவேண்டாம்" என்றான்.

இருவரும் குடித்து முடித்து வெளியில் வந்தார்கள். காவலாளியிடம் விடை பெற்ற அரசர், ரகசிய வழியாக அரண்மனை திரும்பினார்.

சிறிது நேரத்தில் அரண்மனையில் ஆராய்ச்சி மணி அடிக்க ஆரம்பித்தது. 
ஏதேனும் அவசரம் இருந்தால்தான் அந்த மணி ஒலிக்கும் என்பதினால், அரண்மனைக்குப் பக்கமாகக் காவல் இருந்த வீரர்கள் அனைவரும் அரண்மனைக்கு ஓடினார்கள். 

அங்கே அரசர் ஒரு அமைச்சரை எதிரில் நிற்கவைத்து, கோபமாக ஏதோ கூறிக்கொண்டே, காவலாளிகளைப் பார்த்தார். 
மதுக்கடையில் வாளை ஈடாக வைத்த காவலாளியும் அங்கே நின்றான். அவனை அடையாளைம் கண்டு கொண்ட அரசன், அவனை அழைத்து, " வீரனே,,,,,,எனக்குத் துரோகம் செய்த இந்த அமைச்சனை உடனே என் கண்ணெதிரிலேயே உன் வாளால் வெட்டிக்கொன்றுவிடு. இது அரச கட்டளை" என்றார்.

அந்தக் காவலாளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். தன்னிடம் இருப்பது மரவாள் என்று அரசனுக்குத் தெரிந்தால், முதலில் தன் தலைதான் உருளும் என்று அவனுக்குத் தெரியும். அதனால், " அரசே..........அமைச்சர் எந்தத் தவறும் செய்திருக்கமாட்டார். தீர விசாரித்தபிறகு நாளைக் காலையில் தாங்கள் தண்டனை அளிக்கலாமே" என்றான்.

அதைக் கேட்டதும் அரசன் உள்ளுக்குள் நகைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சூழ்நிலையை அவன் எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று பார்க்கும் ஆவலில், " எனக்கே அறிவுரை சொல்கிறாயா???????
.நீ உன் வாளை எடுத்து உடனே அமைச்சனை வெட்டி வீழ்த்தாவிட்டால், மற்றக் காவலாளிகள் உனது தலையை வெட்டிவிடுவார்கள்.... என்றார்.

இந்த நேரத்தில் ஒரு யுக்தி அவனுக்குப் பளிச்சிட்டது. அதன்படி செய்தான் அந்தக் காவலாளி. அவனது யுக்தியைக் கண்ட அரசன் அமைச்சரை விடுதலை செவதாகக் கூறினான்.

பிறகு அவனது புத்தி சாதுர்யத்தை மெச்சிய அரசன், தான் அவனது புத்திசாலித்தனத்தைச் சோதிக்கவே இந்த நாடகத்தை நடத்தியதாகக் கூறி, அவனை பாராட்டினார். 
ஆனால் அவன் வாளை ஈடாக வைத்து கடமை செய்யும் நேரத்தில் மது அருந்திய குற்றத்துக்காக, அதற்குரிய தண்டனையை 
அனுபவித்தபின்பு, அவனையும் தனது அமைச்சர்களில் ஒருவனாக வைத்துக்கொண்டார்.


நண்பர்களே..................காவலாளி அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்ன யுக்தி செய்து தானும் அமைச்சரையும் தப்பிக்க வைத்தான்.?

புதிர் விடை :

இந்த அமைச்சர் நேர்மையானவராக இருந்தால் அவரைக் கொன்ற பழி என்னைச் சாரும். ஆகையால் இவர் நல்லவராக இருந்தால், இறைவா! இந்த வாளை மரவாளாக மாற்று" என்று சொல்லியிருப்பான். 

சித்தம் கலங்கிய மெசபடோமியா நாட்டு அரசனும் , ஒரு புத்திசாலி இளைஞனும் ! - புதிர் கதை

மெசபடோமியா நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது. தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது.  

அரசனும், " நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்" என்று எந்த 
நேரமும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற , அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு, மருந்தினைத் தயார் செய்தார்.


மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள்.  

அப்போது அவிசென்னி என்ற ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். "அரசனை நான் சாப்பிட வைத்துவிடுவேன்" என்று கூறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். அமைச்சர்களும் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர்.

அரசனைப் பார்த்த அவிசென்னி, முதலில் அரசனது பேச்சுக்களை முழுமையாகக் காதில் வாங்கிக் கொண்டான். பிறகு அரசனை தொட்டுப் பார்த்தபடி அரசனிடம் சில வார்த்தைகளைப் பேசினான். பின்பு காவலாளிகளைப் பார்த்து சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவன் கூறியபடி காவலாளிகள் செய்ததும் அரசன் மிகுந்த ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான். 

அதன் பிறகு மருத்துவர் அரசனது உணவுடன் மருந்தினையும் சேர்த்துக் கொடுத்தார். ஒரு மாத காலத்தில் அரசன் சித்தக் கலக்கம் நீங்கி முழுமையாகக் குணமடைந்தான்.பிறகு தான் குணம் அடையக் காரணமாக இருந்த அவிசென்னியை அழைத்து, ஆரத் தழுவி, அமைச்சர் பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.


நண்பர்களே.....அவிசென்னி என்ன தந்திரம் செய்து அரசனைச் சாப்பிட வைத்திருப்பான்.??

புதிர் விடை :

அரசர் தன்னை மாடாக நினைத்து பேசுகிறார் என்பது தெரிந்தது...
அவிசென்னி அரசனை தொட்டு.... அனைவரும் நல்ல கொழு கொழு என்றுள்ள மாட்டைத்தான் விரும்பி உண்பர். நீரோ எலும்பும், தோலுமாக உள்ளீர். சில காலம் நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு உடல் நன்கு தேறினவுடன்.. உங்களை வெட்டி அனைவரும் உண்ணலாம் என்று கூறி.... காவலாளிகளை அரசனை மாடு போல் பாவித்து... மாடுகளுக்கு உணவு பரிமாறும் விதமாக பரிமாற சொல்லியிருப்பான்.... அரசனும் தன்னை மாடாகவே நினைத்து உணவு உண்டு இருப்பான்....

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்