Tuesday, December 24, 2013

பவளத்தீவு அரசன் மணிமாறன் மற்றும் அவனது மந்திரி மதியழகன் - புதிர் கதை

முன்னொரு காலத்தில் பவழத்தீவை மணிமாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.அந்த அரசனுக்கு, மதியழகன் என்ற அமைச்சனும் இருந்தான்.ஒரு நல்ல நாளில் அரசனுக்கும் , பக்கத்து நாட்டு இளவரசிக்கும் திருமணம் நடந்தது.....திருமணம் முடிந்தபிறகு, ஆட்சிப் பொருப்பை முழுவதுமாக அமைச்சன் மதியழகனிடம் ஒப்படைத்துவிட்டு அரசன் அந்தப்புரமே கதியாகக் கிடந்தான்.  

ஆனால் நாட்டு மக்களோ அமைச்சன் மதியழகனது சூழ்ச்சியால்தான் அரசன் ஆட்சிப் பொருப்பைக் கவனிக்காமல் இருப்பதாக பேசிக்கொண்டார்கள்.நல்லவனான அமைச்சன் இதை அறிந்தான். வருந்தினான்....அரசனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து நல்லாட்சி நடத்தவைக்க என்ன வழி என்று ஆலோசனை செய்தான்.


முடிவில், அரசனிடம் சென்று, " அரசே நான் புனிதப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். நான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும். எனக்கு விடை கொடுங்கள். " என்றான்.

அரசன் எவ்வளவோ வற்புறுத்தியும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத அமைச்சன் புனிதப் பயணம் புறப்பட்டான்.நம்பிக்கைக்கு உரியவர் வேறு யாரும் இல்லாததினால், அரசனன்று முதல் ஆட்சியைக் கவனித்தான். மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்..

பயணம் புறப்பட்ட அமைச்சன் மதியழகன், பல ஊர்களைக் கடந்து, ஒரு துறை முகத்தை அடைந்தான். அங்கிருந்த கப்பலில் ஏறிக்க்கொண்டு வேறு நாட்டுக்குப் பயணம் தொடங்கினான்.

கப்[பல் நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது, சிறிது தொலைவில் நீர்ப் பரப்பின் நடுவே இருந்து ஒரு மரம் மேலே ந்ழும்பியது.அந்த மரத்தின் கிளையில் ஒரு பேரழகு வாய்ந்த பெண் ஒருத்தி அமர்ந்துகொண்டு யாழ் மீட்டிப் பாடினாள். மிக இனிமையாகப் பாடினாள். அமைச்சன் வியப்புடன் அந்த அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்தப் பெண் மரத்துடன் நீருக்கு அடியில் சென்று மறைந்துவிட்டாள்.இதைக்கண்டு வியப்படந்த அமைச்சன் , கப்பல் தலைவனிடம் இது பற்றிக் கேட்டான்.

அதற்கு கப்பல் தலைவன், " இந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும் நாங்கள் காணும் அதிசயக் காட்சி இது. எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்று" என்றான்.அதன் பிறகு பல நாடுகளைச் சுற்றிவிட்டு தனது பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சன் நாடு திரும்பினான்.. அவனை அன்புடன் வரவேற்ற அரசன் நீண்ட நாள் பிரிவை, பலவகையாகப் பேசி தீர்த்துக்கொண்டான். அதன் பிறகு அமைச்சனிடம், அவன் பல நாடுகளுக்கும் சென்றபோது, அங்கே ஏதாவது அதிசயத்தைக் கண்டதுண்டா? என்து கேட்டான்.

அதற்கு அமைச்சன் எதையும் மறைக்காமல், தான் கடலின் நடுவில் கண்ட அற்புத மங்கையைப் பற்றிக் கூறினான். அதைக் கேட்ட அரசன் தான் எப்படியாவது அந்தப் பெண்ணைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அமைச்சனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு கப்பலில் ஏறி பயணம் செய்தான்.

அந்தக் குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும், வழக்கம்போல் கடலின் உள்ளே இருந்து மரம் வெளிப்பட்டது. அழகு மங்கை யாழ் இசைத்துக்கொண்டிருந்தாள்.உடனே அரசன் கப்பலை விட்டுக் கடலில் குதித்தான். நீந்திச் சென்று அந்தப் பெண் இருந்த மரத்தில் ஏறினான்.அரசன் மரத்தில் ஏறியதும், அவனையும் சேர்த்து கடலின் உள்ளே மூழ்கிய மரம், கடலின் ஆழத்தில் இருந்த ஒரு குகைக்குக் கொண்டு போனது.யாழ் மீட்டிய நங்கையைப் பார்த்த அரசன் , தான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிவிட்டதாகவும், தான் அரசன் என்றும் , அவளை மணம் புரிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினான்.

அதற்கு அவள், " அரசனே,,,,நான் தேவலோகத்து மங்கை. ஒரு சிறிய தவறிழைத்துவிட்டதால் ஏற்பட்ட சாபத்தில் இப்படி நீருக்கடியில் வாழ்கிறேன்.தினமும் ஒருமுறை வெளியே வந்து யாழ் மீட்டுவேன். அப்போது யாராவது துணிவுடன் என்னை அனுகினால், அவரையே மணம் செய்து இரண்டு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்துவிட்டு, மறுபடியும் தேவலோகம் சென்றுவிடுவேன்.இதுதான் எனது சாப விமோசனம். இப்போது தாங்கள் வந்துவிட்டீர்கள். விரைவில் எனக்கு விமோசனம் கிடைத்துவிடும்� என்றாள்.

அரசனும் அவளை மணந்தான். தனது நாட்டுக்கு அழைத்துவந்தான். அவளுடன் அரசன் மகிழ்வுடன் வாழ்ந்தான். மறுபடியும் அமைச்சனையே ஆட்சியைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அரசன் அந்தப்புரமே கதியாகக் கிடந்தான். அவளது சாப விமோசன நாளும் வந்தது. அவளை அழைத்துச் செல்ல தேவ குரு வந்தார். அரசன் அவள் மேல் கொண்டுள்ள காதலைக் கண்டு, இரக்கப்பட்டு, அரசனது ஆயுட் காலம் முழுவதும் அவள் அங்கேயே தொடர்ந்து இருக்க அனுமதி அளித்தார். அரசி தேவலோகம் செல்லப்போவதை எண்ணி மனக்கவலை அடைந்திருந்த அரசனும், நாட்டு மக்களும் இதைக் கேட்டு அளவில்லாத மகிழ்வடைந்தார்கள்.

ஆனால் அந்த அமைச்சன் மதியழகன் அன்று இரவே தற்கொலை செய்துகொண்டான்.அனைவரும் மகிழ்வடைந்தபோது, அமைச்சன் மட்டும் மனம் வெதும்பி தற்கொலை செய்துகொண்டது ஏன்?

புதிர் விடை :

தேவலோக மங்கை வாழ்நாள் முழுவதும் அரசனோடு இருக்கலாம் என்பதால் இனிமேல் அரசன் அந்தபுரத்தை விட்டு எந்த புறமும் போகமாட்டார். அமைச்சர் மதியழகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அங்கே சந்தோசமாக இருப்பார்.

ஆனால் மக்கள் மதியழகனைத் தான் பழிப்பார்கள், எல்லாம் மதியழகனால் வந்தது, அவரால் தான் அரசனுக்கு தேவலோக மங்கை கிடைத்தார், அரசன் அந்தபுரத்திலேயே அடங்கி கிடக்கிறார் என்று தூற்றுவார்கள். மேலும் மதியழகன் இல்லை என்றால் கண்டிப்பாக அரசன் ஆட்சியை ஏற்று நடத்துவார் என்பதால் மனம் வெம்பி தற்கொலை செய்து கொண்டார்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்