Thursday, December 19, 2013

ஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் ! - புதிர் கதை

பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். 

ஒருநாள் மாலை நேரம்.அரசனும் அரசியும் உறங்கும் கட்டில் மெத்தையை அவர்களது வேலைக்காரன் சரி செய்ய வந்தான்..மெத்தை விரிப்புகளை தட்டிப் போட்டபின்பு, முல்லை மல்லிகை மலர்களை மெத்தையில் பரப்பினான்.பிறகு இனிய மணம் வீசும் ஊதுபத்திகளை ஏற்றிவைத்தான்.வேலையை சரியாக முடித்துவிட்டோமா என்று மெத்தையை ஒருதரம் சரிபார்த்தான்.


மெத்தையின் அழகும், அந்த அறையில் இருந்த இனிய நறுமணமும் அவனது சிந்தையையை மயக்கியது.'அரசனும் அரசியும் படுக்க வருவதற்கு எப்படியும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் சிறிது நேரம் மெத்தையில் படுத்து, அந்த சுகத்தை நான் அனுபவித்தால் என்ன?' என்ற்ற நினைவு அவன் மனதில் பீரிட்டது.ஆவலை அடக்க இயலாத வேலைக்காரன் மெத்தையின் ஒரு ஓரத்தில் படுத்தான். அப்படியே அசந்து உறங்கிவிட்டான்.

சிறிது நேரம் கழிந்தது.அரசி படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.அறையின் மங்கலான வெளிச்சத்தில் படுக்கையில் படுத்திருப்பது அரசன்தான் என்று நினைத்து, பக்கத்தில் படுத்தாள்.அரசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். அதனால் அவரை எழுப்பவேண்டான் என்று நினைத்து மெத்தையில் ஒரு ஓரத்திலேயே படுத்து உறங்கிவிட்டாள்.

பிறகு சிறிது நேரம் கழித்து அரசன் படுக்கை அறைக்குள் வந்தான்.படுக்கையில் இருவர் படுத்திருப்பது தெரிந்தது.நம் படுக்கையில் யார் படுத்துள்ளது என்ற கேள்வியுடன் விளக்கு வெளிச்சத்தை அதிகப்படுத்தினான்.அங்கே அரசியுடன் வேலைக்காரன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் அந்த அதிர்ச்சி கடும் கோபமாக மாறியது."உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் பார்" என்று கத்தினான்.

அரசனின் இடிபோன்ற குரலைக் கேட்டு அரசியும் வேலைக்காரனும் பதறி எழுந்தார்கள்.அப்போதுதான் வேலைக்காரனுக்கு உண்மை உரைத்தது. தன்னை அரசன் என்று நினைத்து அரசி பக்கத்தில் படுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இதைப் பார்த்த அரசன் வேறுவிதமாக நினைத்துவிட்டான்.எப்படியும் தனக்கு கடும் தண்டனை கொடுக்காமல் விடமாட்டான். குற்றமில்லாத அரசியையாவது காப்பாற்றுவோம் என்று முடிவு செய்த வேலைக்காரன், அரசனின் கால்களில் விழுந்து " அரசே, ஏதோ ஒரு ஆசையால் தங்கள் படுக்கையில் படுத்துவிட்டேன். அதற்காக தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். அரசியார் எனக்குத் தாய் போன்றவர்கள்.அரசர்தான் படுத்துள்ளார் என்று எண்ணி என் பக்கத்தில் படுத்துவிட்டார்கள். அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. தாங்கள் எனக்குத் தண்டனை கொடுத்து அரசியை மன்னித்துவிடுங்கள்" என்று கெஞ்சினான்.

கோபம் இன்னும் உச்சத்தை எட்ட " என்னடா புதுக்கதை அளக்கிறாய்.?நீயும் அவளும் ஒரே மெத்தையில் இருந்ததை என் கண்ணால் பார்த்தேன்.கண்களைவிடச் சிறந்த சாட்சி இருக்கிறதா??.நீங்கள் இருவருமே நாளை தூக்கில் தொங்கப் போகிறீர்கள்" என்று கத்தினான்.

நடந்ததை அறிந்த அமைச்சர் அரண்மனைக்கு ஓடி வந்தார். அங்கிருந்த நிலைமையைப் புரிந்துகொண்டார். அரசனைப் பார்த்து, " கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். அதனால் நடந்தது என்ன என்று இருவரிடம் கேட்போம். தவறு இருந்தால் தண்டனை கொடுப்போம்" என்றார்.

அமைச்சர் குறுக்கிட்டதை விரும்பாத அரசன், " அமைச்சரே இருவரும் ஒரே படுக்கையில் இருந்ததை நான் எனது கண்களால் பார்த்தேன்.என் கண்களைவிட வேறு சாட்சிகள் இருக்க முடியுமா?அப்படி உன்னால் அவர்கள் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்க இயலுமானால் ,  தாராளமாக நிரூபிக்கலாம். நானும் மன்னிக்கிறேன். இல்லையானால் நாளைக் காலையில் இவர்களுக்கு தூக்கு நிச்சயம்" என்றான்

அரசியையும் வேலைக்காரனையும் அமைச்சர் தீர விசாரித்தார். அந்த அறையிலும் நன்றாக ஆராய்ந்தார். 

பிறகு அரசனிடம் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபித்தார். 

நண்பர்களே, அமைச்சர், அவர்கள் இருவரும் குற்றம் செய்யவில்லை என்று எப்படி அரசனுக்குத் தெளிவு படுத்தினார்?

புதிர் விடை :

கதையில் ஆரம்பத்தில் வேலைக்காரன் படுக்கையில் முல்லை பூக்களை தூவியிருக்கிறான் இல்லையா, வேலைக்காரன் ஒரு ஓரமும், அரசி அடுத்த ஓரத்திலும் படுத்திருக்கிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் முல்லை மலர்கள் நசுக்காமல் அப்படியே இருப்பதை வைத்து, அமைச்சர் இருவரும் தவறு செய்யவில்லை என்பதை அரசருக்கு புரிய வைத்திருப்பார்.

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் நடந்த சம்பவம், எனவே அவர்களை விடுதலை செய்ய சொல்லியிருப்பார்.

குறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் ! - புதிர் கதை

வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.

வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டதினாலும், பயணத்தில் களைப்பு அடைந்திருந்ததினாலும், அவன் அந்தச் சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து, மறுநாள் பயணத்தைத் தொடரலாம் என்று முடிவு செய்தான்.அதனால் குதிரையை விட்டிறங்கி, சத்திரத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் குதிரையைக் கட்டினான்.பிறகு அது உண்ணுவதற்காக புல் போட்டுவிட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான்.


அப்போது அங்கிருந்து குறும்புக்கார வாலிபன் ஒருவன், குதிரையின் வாலைப் பிடித்து இழுத்து விளையாட ஆரம்பித்தான்.சத்திரஹ்துக்குள் நுழைந்தவன் இதைப் பார்த்ததும், திரும்பிவந்து, "தம்பி, இது முரட்டுக் குதிரை.வலைப்பிடித்து இழுத்தால் அது கோபம் கொண்டு உதைக்கும். அது உதைத்தால் உனது பற்கள் எல்லாம் உடைந்துபோகும். அதனால் குதிரையுடன் விளையாடாதே" என்று எச்சரித்து விட்டுப் போய்விட்டான்.

ஆனால் அந்தக் குறும்பனோ அவன் கூறியதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தனது விளையாட்டை மீண்டும் தொடர்ந்தான்.வாலைப் பிடித்து இழுத்ததினால் கோபம் கொண்ட குதிரை, ஓங்கி ஒரு உதை கொடுத்தது. அது சரியாக அவனது முகத்தில் பட்டு, நான்கு குட்டிக் கரணங்கள் போட்டு விழுந்தான். அவனது முன்பற்கள் எல்லாம் சிதரியது. முகத்திலும் காயம் ஏற்பட்டு வலி பொறுக்க முடியாமல் கூக்குரலிட்டான்.

"இந்த அநியாயத்தைக் கேட்பார் யாரும் இல்லையா?" என்று கூச்சலிட்டதைக் கேட்டு அங்கே கூட்டம் கூடிவிட்டது. ஊர்க்
காவலர்களும் வந்தார்கள்.என்ன நடந்தது என்று கேட்டதற்கு, " நான் ஒன்றுமே செய்யவில்லை. இந்தக் குதிரையின் பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது இந்த முரட்டுக் குதிரை என்னை உதைத்துவிட்டது. எனது பற்களும் உடைந்து விட்டது. இப்படிப்பட்ட முரட்டுக் குதிரையை அனைவரும் நடக்கும் இடத்தில் கட்டி வைத்தது குதிரைக் காரனின் குற்றம். அதனால் அவன் எனக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும். அல்லது அவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்" என்று புலம்பினான்.

கவலர்கள் அவனை அந்த ஊர் நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அவனும் நீதிபதியிடம் தனது வழக்கைக் கூறினான்.
நீதிபதி குதிரைக்காரனை வரவழைத்தார்.அவனைப் பார்த்து, " ஐயா...இந்தக் குதிரை உன்னுடையதுதானா?" என்று தனது முதல் கேள்வியைக் கேட்டார்.குதிரைக்காரன் ஒன்றுமே பதில் பேசாமல் அமைதியாக நின்றான்.

மீண்டும் அவனிடம்" உன் குதிரையால்தான் இவனுக்கு இவ்வளவு காயமும், பற்களும் உடைந்துள்ளது. இதற்கு நீ என்ன கூறுகிறாய்" என்று நீதிபதி கேட்டார்.அப்போதும் அவன் பதில் பேசவில்லை.

அதைக் கண்ட நீதிபதி, " இவன் செவிட்டு ஊமை போல் தெரிகிறது.என்ன கேட்டாலும் அவனுக்குப் புரியவில்லை. அதனால் எப்படி வழக்கைத் தொடர்ந்து நடத்துவது" என்று கூறினார். 

உடனே அந்தக் குறும்பன் நீதிபதியைப் பார்த்து சில விஷயங்களைக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட நீதிபதி, கொஞ்சம் ஆலோசித்துவிட்டு, தவறு உன்னுடையதுதான். அதனால் அவர் நட்ட ஈடு எதுவும் தரவேண்டியதில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

மன்ற நண்பர்களே........அந்த குறும்புக்கார வாலிபன் என்ன கூறியதற்கு நீதிபதி இப்படித் தீர்ப்பு கூறினார்? 

புதிர் விடை : 

குதிரைக்காரன் ஊமை என்று எல்லோரும் சொல்லக் கேட்ட அவசரக்கார குறும்பன் "நீதிபதி அய்யா, அவன் ஒன்றும் ஊமை இல்லை, என்னிடம் குதிரை வாலை இழுத்தால் உதைக்கும் என்றான், ஆகையால் அவன் ஒன்றும் ஊமை இல்லை" என்றோ அல்லது "அவன் குதிரையை மரத்தில் கட்டியதும் என்னிடம் பேசினான்" என்றோ உளறி இருப்பான்.

படுத்தால் எழாதவள் , உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் ! - புதிர் கதை

ஒரு முதியவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்த பெரியவர்களைப் பார்ஹ்து, " ஐயா....நான் எனது மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி இந்த ஊருக்கு வந்துள்ளேன்" என்றார். 

அங்கிருந்த பெரியவர்களும், " ஐயா...கண்டிப்பாக உமக்கு ஒரு நல்ல மறுமகள் இந்த ஊரில் கிடைப்பாள்.முதலில் உங்கள் மகனைப் பற்றிக் கூறுங்கள்" என்றார்கள்.


"என் மகன் மிகவும் அழகாக இருப்பான்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது..... ஆனால் உட்கார்ந்தால் எழுந்திருக்க மாட்டான்" என்றார் முதியவர்.
முதியவர் கூறியதைக் கேட்டதும் முகம் சுளித்தார்கள் அங்கிருந்தவர்கள்." கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவனாக இருப்பான் போலிருக்கிறதே!திமிர் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. அதினால்தான் உமது மகனுக்கு உங்கள் ஊரில் பெண் கிடைக்காமல் இங்கே வந்திருக்கிறீர்கள். முதலில் இடத்தைக் காலி செய்யுங்கள். இந்த ஊரில் உம் மகனுக்கு யாருமே பெண் கொடுக்க மாட்டார்கள்" என்றார்கள் அனைவரும்.

முதியவர் வருத்தத்துடன் அங்கிருந்து அடுத்த ஊருக்குப் போனார். அங்கேயும் அதே நிலைமைதான். பிறகு அங்கிருந்து ஊர் ஊராக அலைந்துவிட்டு, மங்களாபுரத்துக்கு வந்து சேர்ந்தார்.

மங்களாபுரத்திலும் தனது மகனைப் பற்றிக் கூறி அவனுக்குப் பொருத்தமான பெண் கிடைப்பாளா? என்று விசாரித்தார்.

முதியவர் சொன்னதைக் கூர்ந்து கேட்டார் ஒரு பெரியவர். பிறகு புண் முறுவலுடன் முதியவரை அழைத்து, " ஐயா....உமக்கு எனது மகளைப் பற்றிக் கூறுகிறேன். உங்களுக்குப் பிடிஹ்திருந்தாள், உமது மகனுக்கு மணம் செய்து வைக்கலாம்" என்றார்.
சொல்லுங்கள் என்றார் முதியவர்.

" எனது மகள் மிகுந்த அழகுடன் இருப்பாள். அவளிடம் எந்தக் குறையும் கூற முடியாது. ................ஆனால் படுத்துவிட்டாள் எழுந்திருக்க மாட்டாள்"என்றார்.

பெரியவர் கூறியதைக் கேட்ட முதியவர், " ஐயா.....இப்படிப்பட்ட பெண்ணைத்தானே நான் இதுவரை தேடிக்கொண்டிருந்தேன்.கடவுள் அருளால் நான் தேடிய பெண்ணே கிடைத்துவிட்டாள்.உடனே திருமணத்தை முடித்துவைப்போம்" என்றார்.

ஒரு நல்ல நாளில், படுத்தால் எழாத பெண்ணுக்கும், உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும் மணம் நடந்தது.அவர்கள் இருவருமே சிறப்பாக அனைவரும் போற்றும் வண்ணம் இல்லறம் நடத்தினார்கள்.

மன்ற நண்பர்களே...வாருங்கள்..... 
எதனால் அந்தப் பெண்ணை படுத்தால் எழாதவள் என்றும், 
அந்த இளைஞனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும் கூறினார்கள்.??

புதிர் விடை :

படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அதற்கு அவள் சோம்பேறிப் பெண் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஒரு பெண் பொழுது போனதும், சோம்பலாகப் படுக்கையில் படுத்திருந்தால், கணவன் வெளியில் இருந்து வந்ததும், ஒருமுறை எழுந்து உணவு பறிமாற வேண்டும்.இதேபோல், மாமனார், மைத்துனர் இப்படி வீட்டு ஆட்கள் யார் வந்தாலும் எழுந்திருக்க வேண்டும்.. அனைவக்கும் உணவு பறிமாறிப் பின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுப் படுத்தால் அவள் மறுபடியும் எழுந்திருக்கத் தேவை இல்லை. இப்படிப்பட்ட குடும்பப் பொறுப்பான பெண் என்ற பொருளில் தான் 'படுத்தால் எழுந்திருக்காத பெண்' என்றார் பெரியவர்.

ஒரு மகன் தரையில் தாழ அமர்ந்திருந்தால், தந்தை மற்றும் பெரியவர்கள் வரும்போது எழுந்து மரியாதை தரத் தேவையில்லை.. அதே சமயம் நாற்காலியில் அமர்ந்திருந்தால், ஒவ்வொருவர் வரும்போதும் எழுந்திருக்கவேண்டும். அதனால் மிகவும் மரியாதை தெரிந்த மகன் என்ற பொருளில் முதியவர் ' உட்கார்ந்தால் எழுந்திருக்காத மகன் ' என்றார்.

ஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் ! - புதிர் கதை

முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.

ஒரு நாளிரவு, அல் ரஷீதும், ஜாபரும் மதுவைக் குடித்து, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இருவருக்குமே போதை ஏறிக்கொண்டிருந்தது.

அப்போது அல் ரஷீத், " ஜாபர் ...நீ அழகான அடிமைப் பெண் ஒருத்தியை விலைக்கு வாங்கியிருக்கிறாயேமே!!!...எனக்கு அவளை விற்றுவிடு.நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன்" என்றார்.


அதற்கு ஜாபர் தனக்கு என்ன விலை கொடுத்தாலும் அந்த அடிமைப் பெண்ணை யாருக்கும் விற்பதாக இல்லை என்றார்.
அப்படியானால் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடு என்றார் அரசர்.
அன்பளிப்பாகவும் கொடுக்கமுடியாது என்றார் ஜாபர்.

மதுவின் போதையில் இருந்த அரசருக்கு கடுமையான கோபம் உண்டானது."ஜாபர்.....நீ எனக்கு அடிமைப் பெண்ணை விலைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ தந்தே ஆகவேண்டும். அப்படி அவள் எனக்கு கிடைக்காதுபோனால், பட்டத்து அரசி சுபேதாவை நான் தலாக் செய்துவிடுவேன் [விவாக ரத்து] இது உறுதி" என்று கூச்சல் போட்டார்.

போதை தலைக்கேறியிருந்த ஜாபரும், " நான் அவளை உங்களுக்கு விற்கவோ அல்லது அன்பளிப்பாகவோ தரமாட்டேன். அப்படித் தந்துவிடுவேனேயானால், எனது மூன்று குழந்தைகளுடன் என் மனைவியை தலாக் [ விவாகரத்து] செய்துவிடுவேன். இதுவும் உறுதி" என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து இருவருக்குமே போதை தெளிந்தது. குடிபோதையில் இருவரும் பேசியவை நினைவுக்கு வந்தது. என்ன செய்தாலும் இருவரில் யாராவது ஒருவர் விவாகரத்து செய்தே ஆகவேண்டுமே.......வாழ்க்கை பாழாகிவிடுமே....என்ன செய்வது என்று இருவருமே வருந்தினார்கள்.

எந்த சிக்கலான பிரச்சினயானாலும் அதற்குத் தகுந்த தீர்வு கூறும் காஜி யூசுப்பை அழைத்துவரும்படி காவலர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்த இரவு வேளையிலே காவலர்கள் சென்று காஜியை அழைத்துவந்தார்கள்.

நடந்த விஷயத்தை அவரிடம் கூறி இதற்கு சிக்கல் இல்லாமல் தீர்வு எப்படிக் கான்பது என்று கேட்டார்கள்.
அவர்கள் கூறியது முழுவதையும் கேட்ட காஜி சிரித்தபடியே, " இதில் எந்த சிக்கலுமே இல்லையே.சுலபமாக தீர்வு கானலாமே!!!" என்றார்.

அவர் கூறியபடியே நடந்து இருவருக்குமே எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்களே காஜி யூசூப் இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு கூறியிருப்பார்.?


 புதிர் விடை :

அவர்களது பிரச்சினையைக் கேட்ட யூசுப் அலி " இதிலே சிக்கல் எதுவுமே இல்லையே.  மிகச் சுலபமாக இதற்குத் தீர்வு கானலாம் " என்றார்.

" இந்த அடிமைப் பெண்ணை அமைச்சர் உங்களுக்கு பாதி விலைக்கும், பாதி அன்பளிப்பாகவும் தரவேண்டும். அதனால் அமைச்சர் விற்றதாகவும் ஆகாது. அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும் ஆகாது. ஆக இதனால் நீங்கள் இருவருமே கூறியது போலவே நடந்துள்ளது. அதனால் இருவரது சபதங்களுமே காப்பாற்றப் படும்" என்றார். யூசுப்பின் தீர்வைக் கேட்ட இருவருமே மகிழ்ந்தார்கள். 

அமைச்சர் உடனே அந்தப் பென்னை வர வழைத்து, அரசனுக்குப் பாதி விலையாகவும் பாதி அன்பளிப்பாகவும் கொடுத்தார்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்