Tuesday, August 18, 2015

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி


பல நேரங்களில், ‘அந்த இ-மெயிலை’ அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் ‘செட்டிங்ஸ்’-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

‘undo send’ (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் ‘undo send’ (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!


கருத்துரிமையைப் பறிக்கும் பிரிவு 66-ஏ-க்குச் சவால் விட்ட அ.மார்க்ஸ்

ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வலைத்தளத்தில் கருத்து சொல்வோரைக் கைது செய்ய அனுமதிக்கும் 2000 ஆம் வருடத்துத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-ஏ செல்லாது என்றும் தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்தப் பிரிவு இருப்பதால் இதனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பை இன்று பலர் வரவேற்கின்றனர். பலர் வழக்கு தொடுத்ததற்காக ஸ்ரேயா சிங்காலைப் பாராட்டுகின்றனர். உண்மையில், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் 66-ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான குரல் முதன் முதலில் கிளம்பியதே தமிழ்நாட்டில்தான்.

முதல் வழக்கு பின்னணி
29-10-2012-ல் டுவிட்டரில் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளார் என கருத்து தெரிவித்த ரவி என்பவரை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏ-வின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து 66-ஏ பிரிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடுத்தவர் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ். இதுதான் இந்தியாவிலேயே கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை நீக்க நீதிமன்றக் கதவைத் தட்டிய முதல் வழக்கு.

கவனிக்க வைத்த பிற வழக்குகள்
2012 ம் ஆண்டு நவம்பர் 17ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானார். அவரின் மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஷாஹின் என்ற பெண் கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துக்கு அவரது தோழி விருப்பம் தெரிவித்திருந்தார். அதன் விளைவு அவர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ- வின் படி கைது செய்யப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க ஷாஹின் உறவினர் மருத்துவமனையும் சிவசேனா கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அப்படி என்னதான் கருத்து அவர் தெரிவித்திருந்தார்? ”பயத்தால் இந்த பந்த் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

அதே போல் இந்திய நாடாளுமன்றத்தைக் கழிப்பிடமாகவும் இந்திய முத்திரையில் உள்ள சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த பத்திரிகையாளரான திரிவேதி, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா ஆகியோர்களின் கைதும் அனைவரையும் கவனிக்க வைத்தவை.

இந்தக் கைது நடவடிக்கைகள் கருத்து தெரிவிப்பவர்களின் மத்தியிலும், வெகுஜனங்களின் மத்தியிலும் பிரிவு 66 ஏ என்கிற கொடூரமான சட்டப்பிரிவுக்கு எதிரான உணர்வையே தூண்டியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் கைதானவர்கள் அனைவரும் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஊழியர்கள் ஆகியோர்தான். வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் அரசியலில் உள்ளவர்கள். அதிலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. அவர்களின் கையே இதில் ஓங்கியுள்ளது.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு
சட்டக் கல்லூரி மாணவியான ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில், கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் 66-ஏ பிரிவை எதிர்த்து பொது நல வழக்கு தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதத்தை அடுத்து உச்சநீதிமன்றம் மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ -வை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், அரசியல் சாசனத்தில், அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே 66-ஏ பிரிவு உள்ளது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டுக்கு நெருக்கமான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு?

”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு?


Net Neutrality என்று சொல்லப்படும் வலைத்தள சமவாய்ப்பு என்றால் என்ன?

இன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக, ஒரே வேகம் கொண்டதாக, எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. நீங்கள் ஏழையா, பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு.

வலைத்தள சமவாய்ப்புக்கு இப்போது என்ன அச்சுறுத்தல்?

வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேகமான இணைய சேவையை அதிக விலையில் விற்க முயற்சி செய்கின்றன. அதிகமாக பணம் கொடுத்தால் அதிவேக இன்டர்நெட் சேவை, மற்ற எல்லோருக்கும் வேகம் குறைந்த சேவை என்கிற முறையை செயல்படுத்த இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றன. இந்த முறை செயல்பட்டால் இணையத்தில் விரைவு சேவை, மெதுவான சேவை என்கிற பாகுபாடு உண்டாகும்.

இந்தப் பாகுபாடு யாரையெல்லாம் பாதிக்கும்?

எல்லா வகையான நுகர்வோரையும் இந்தப் பாகுபாடு பாதிக்கும். இன்டர்நெட்டின் இப்போதைய ஜனநாயகத் தன்மையால் பலனடைந்து வரும் புதிய வலைத்தளத் தொழில்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்னையின் அடிப்படை என்ன?

தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பினால்தான் கூகுளும் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் ஸ்கைப்பும் பிரபலமாகியுள்ளன என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தச் சேவைகளைப் பெற அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் இவற்றைச் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ய சில தொலைதொடர்பு நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்த அணுகுமுறை புதிய வலைத்தள தொழில்முனைவோரை முடக்கிவிடும்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வை அகற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இணைய/வலைத்தள சேவை என்பதை பொது சேவை என்று வரையறுப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் இந்தச் சேவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வேண்டுதலுக்கு இணங்க, அமெரிக்காவின் மத்திய தொடர்பியல் ஆணையம் (எஃப்.சி.சி) 2015 பிப்ரவரியில் இணைய சேவையை பொது சேவை என்று அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வலைத்தள சமவாய்ப்பு உறுதியானது.

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!


கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்றிருக்கும் சுந்தர் பிச்சைக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சுந்தர் பிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், ‘கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள்.

புதிய பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட, தமிழக மக்களின் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் சுந்தர்பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை(43), பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்து, ஐஐடி கரக்பூரில் பொறியியல் படித்தவர். பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்து 2004ல் கூகுள் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் படிப்படியான வளர்ச்சியை எட்டிய அவர், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தகவல் தொழிற்நுட்ப துறை வட்டாரங்களில் புகழ் பெற ஆரம்பித்தார். கூகுள் மெயில், ஆண்டிராய்டு, கூகுள் க்ரோம் போன்ற கூகுள் நிறுவனத்தின் உருவாக்கங்கள் முழுமையடைவதற்கு சுந்தர் பிச்சையின் பங்களிப்பை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக இணைய உலவியான கூகுள் க்ரோம், முன்னணி இடத்தில் இருப்பதற்கு சுந்தர் பிச்சை மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

இணைய நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் முதன்மை செயல் அதிகாரி பணிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. அதில் தற்போது யாஹுவின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் மரிசா மேயரும் அடங்குவார். ஆனால் கூகுள் நிறுவனர்களின் நீண்ட கால அவதானிப்பில் சுந்தர் பிச்சையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவே, அதன் பலனாக முதன்மை செயல் அதிகாரியாக நியமனம் கிடைத்திருக்கிறது.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்