Tuesday, August 18, 2015

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!


கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்றிருக்கும் சுந்தர் பிச்சைக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சுந்தர் பிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், ‘கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள்.

புதிய பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட, தமிழக மக்களின் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் சுந்தர்பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை(43), பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்து, ஐஐடி கரக்பூரில் பொறியியல் படித்தவர். பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்து 2004ல் கூகுள் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் படிப்படியான வளர்ச்சியை எட்டிய அவர், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தகவல் தொழிற்நுட்ப துறை வட்டாரங்களில் புகழ் பெற ஆரம்பித்தார். கூகுள் மெயில், ஆண்டிராய்டு, கூகுள் க்ரோம் போன்ற கூகுள் நிறுவனத்தின் உருவாக்கங்கள் முழுமையடைவதற்கு சுந்தர் பிச்சையின் பங்களிப்பை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக இணைய உலவியான கூகுள் க்ரோம், முன்னணி இடத்தில் இருப்பதற்கு சுந்தர் பிச்சை மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

இணைய நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் முதன்மை செயல் அதிகாரி பணிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. அதில் தற்போது யாஹுவின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் மரிசா மேயரும் அடங்குவார். ஆனால் கூகுள் நிறுவனர்களின் நீண்ட கால அவதானிப்பில் சுந்தர் பிச்சையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவே, அதன் பலனாக முதன்மை செயல் அதிகாரியாக நியமனம் கிடைத்திருக்கிறது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்