Tuesday, August 18, 2015

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!


கருத்துரிமையைப் பறிக்கும் பிரிவு 66-ஏ-க்குச் சவால் விட்ட அ.மார்க்ஸ்

ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வலைத்தளத்தில் கருத்து சொல்வோரைக் கைது செய்ய அனுமதிக்கும் 2000 ஆம் வருடத்துத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-ஏ செல்லாது என்றும் தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்தப் பிரிவு இருப்பதால் இதனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பை இன்று பலர் வரவேற்கின்றனர். பலர் வழக்கு தொடுத்ததற்காக ஸ்ரேயா சிங்காலைப் பாராட்டுகின்றனர். உண்மையில், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் 66-ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான குரல் முதன் முதலில் கிளம்பியதே தமிழ்நாட்டில்தான்.

முதல் வழக்கு பின்னணி
29-10-2012-ல் டுவிட்டரில் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளார் என கருத்து தெரிவித்த ரவி என்பவரை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏ-வின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து 66-ஏ பிரிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடுத்தவர் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ். இதுதான் இந்தியாவிலேயே கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை நீக்க நீதிமன்றக் கதவைத் தட்டிய முதல் வழக்கு.

கவனிக்க வைத்த பிற வழக்குகள்
2012 ம் ஆண்டு நவம்பர் 17ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானார். அவரின் மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஷாஹின் என்ற பெண் கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துக்கு அவரது தோழி விருப்பம் தெரிவித்திருந்தார். அதன் விளைவு அவர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ- வின் படி கைது செய்யப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க ஷாஹின் உறவினர் மருத்துவமனையும் சிவசேனா கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அப்படி என்னதான் கருத்து அவர் தெரிவித்திருந்தார்? ”பயத்தால் இந்த பந்த் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

அதே போல் இந்திய நாடாளுமன்றத்தைக் கழிப்பிடமாகவும் இந்திய முத்திரையில் உள்ள சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த பத்திரிகையாளரான திரிவேதி, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா ஆகியோர்களின் கைதும் அனைவரையும் கவனிக்க வைத்தவை.

இந்தக் கைது நடவடிக்கைகள் கருத்து தெரிவிப்பவர்களின் மத்தியிலும், வெகுஜனங்களின் மத்தியிலும் பிரிவு 66 ஏ என்கிற கொடூரமான சட்டப்பிரிவுக்கு எதிரான உணர்வையே தூண்டியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் கைதானவர்கள் அனைவரும் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஊழியர்கள் ஆகியோர்தான். வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் அரசியலில் உள்ளவர்கள். அதிலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. அவர்களின் கையே இதில் ஓங்கியுள்ளது.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு
சட்டக் கல்லூரி மாணவியான ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில், கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் 66-ஏ பிரிவை எதிர்த்து பொது நல வழக்கு தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதத்தை அடுத்து உச்சநீதிமன்றம் மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ -வை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், அரசியல் சாசனத்தில், அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே 66-ஏ பிரிவு உள்ளது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டுக்கு நெருக்கமான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்