Tuesday, December 17, 2013

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்


பங்குச்சந்தையில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்ட Facebook ஆனது மோசமான நிலைக்குத் தள்ளப்படலாமென்ற அறிகுறியைக் காட்டுகின்றது.

மூத்த முதலீட்டு அதிகாரியான Ironfire Capital இன் நிறுவுனர் எரிக் ஜக்சன் Facebook இன்னும் 8 வருடங்களில் பெறுமதியில் வீழ்ச்சியடைந்து காணாமற்போய்விடுமெனக் கூறினார். வேறு புதிய நிறுவனங்களுடன் நிற்கமுடியாமல் தள்ளாடும் இந்நிறுவனம் இணைய அரக்கனாக இருந்த Yahoo இனைப்போல வீழ்ச்சியடையுமென்றும் கூறினார்.

அவர் மேலும் இதுபற்றிக் குறிப்பிடுகையில் நவீன இணையத்தளங்களின் வருகையால் Yahoo இனைப்போல இது விரைவில் மறைந்துவிடலாமென்றும் கூறினார். Yahoo மறைந்தாலும் அது இன்னமும் பணம் சம்பாதித்துக்கொண்டுதானிருக்கின்றது. அதில் 13,000 பணியாளர்கள் இன்னமும் வேலைசெய்துகொண்டுதானிக்கின்றார்கள். ஆனால் 2000ம் ஆண்டில் இதன் நிலை மிக உச்சத்திலிருந்தது.


Facebook தற்போது கையடக்கத் தொலைபேசி மென்பொருட்களையே வரிசையாக வெளியிட்டு வருகின்றது. ஆனால் விளம்பரங்கள் இல்லாமல் இந்த மென்பொருட்களை வெளியிட்டதால் சற்றுப் போராடிவருகின்றது.

எரிக் ஜக்சன் நிறுவனங்களை 3 பிரிவாகப் பிரிக்கின்றார். Yahoo போன்ற இணையத்தளங்கள், Facebook போன்ற சமூக சேவைத் தளங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள்.

இதுபற்றி சக்கர்பேர்க் கருத்துத் தெரிவிக்கையில் Google ஒரு சமூக ஊடகமாக மாறுவதற்குப் பெரும் போராட்டங்களைச் சந்தித்துள்ளது. அதுபோலவே Facebook ம் தனது கையடக்கத் தொலைபேசிச் சேவைக்குள் செல்வதற்கும் சவால்களை எதிர்நோக்குமெனத் தெரிவித்தார்.

உலகம் வேகமாக நகர்கின்றது. அது மிகவும் போட்டி மிக்கது. இந்தப் புதிய தலைமுறைக்குள் நகர்வதற்கு ஒவ்வொருவரும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும் என்றார் அவர்.

நிலைமை மிக மோசமடைய பேஸ்புக், டுவிட்டரே காரணம்

நிலைமை மிக மோசமடைய பேஸ்புக், டுவிட்டரே காரணம்


இங்கிலாந்தில் சமூக இணையத்தளங்களின் பாதிப்பு குறித்து சல்போர்டு பல்கலைக்கழகத்தின், சல்போர்டு பிசினஸ் ஸ்கூல் விரிவான ஆய்வொன்றை நடத்தியது. அந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள், 

கருத்து சொன்ன நபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்களை பயன்படுத்துவதால் தங்கள் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். பலர், அதனால் தங்கள் நிலை மோசமாகி விட்டதாக கருத்து தெரிவித்தனர். 


தொடர்பில் இருக்கும் நண்பர்களின் சாதனைகள், திறமைகளை அறிந்து ஒப்பிட்டு பார்ப்பதால், தங்கள் நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், கவலை அதிகரிப்பதாகவும் 3ல் இரண்டு பங்கினர் கூறினர். பேஸ்புக், டுவிட்டரால் ஓய்வு எடுக்க நேரமில்லை என்றும், தூக்கம் குறைந்து விட்டதாகவும் பலர் தெரிவித்தனர். 

சமூக இணையத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் பணியிடத்தில் பிரச்னையும், உறவினர்களின் கோபத்தையும் சந்திப்பதாக 3ல் ஒரு பங்கினர் தெரிவித்தனர். 

நான்கு பேர் , இரண்டு குடை , வெளியில் மழை :D - புதிர் கதை

சின்ன குடும்பம் அது. அப்பா...அம்மா...பத்து வயது மகன்.......எட்டு வயது .மகள் .....என்று நான்கு பேர் கொண்ட குடும்பம்.

ஒருநாள் வெளியே கடும் மழை பெய்து கொண்டிருந்தது. நால்வரும் அவசியமான காரியமாக வெளியே போகவேண்டிய அவசியம் .
அதனால் வீட்டில் இருந்த இரண்டே குடைகளை எடுத்துக்கொண்டு நால்வரும் வெளியே புறப்பட்டார்கள்.


ஒரு குடைக்கு இரண்டு பேராகப் போகவேண்டும்.
நான்கு பேருமே நான்தான் குடையைப் பிடிப்பேன்...மற்றவர் உடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்கள்.!!!!!

சரி.......... இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி.
இவர்களில் யார் யார் குடையைப் பிடிக்கவேண்டும்...?....ஏன்??

புதிர் விடை :
சுருக்கமான விடை......உயரமானவர்கள் குடை பிடிக்க அவர்களைவிட குள்ளமானவர்கள் உடன் வரவேண்டும் .

தெண்பாண்டிச் சீமையும் , பூதத்தின் ஆட்டூழியமும் - புதிர் கதை

முன்னொரு காலத்தில் தெண்பாண்டிச் சீமை மிகுந்த சீரும் சிறப்புடனும் விளங்கியது. முத்துக்குளிக்கும் மீனவர் கூட்டம் கடலில் இருந்து கொண்டு வந்து குவித்த முத்துக்களை வாங்கிச் செல்ல சிரேக்க யவனரும், அராபியரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். அவர்கள் வரும்போது கொண்டு வந்த சாம்பிராணியும், அத்தரும், உப்பளங்களின் வாசனையையும் மீறி, தூத்துக்குடி நகரையே பரிமளிக்கச் செய்து கொண்டிருந்தது. அராபியர்களின் குதிரைகள் காற்றெனப் பாய்ந்து ஓடிய குளம்போசைகள் வீரர்களுக்கு மது அருந்தாமலேயே உற்சாகத்தை அள்ளி அள்ளித் தந்தது.

இப்படிப்பட்ட சீர் மிகுந்த தூத்துக்குடி நகரின் ஒரு பக்கம் கடல். மற்ற மூன்று திசைகளிலும் குன்றுகளும் மலைகளும் இருந்த காலம் அது. ஒருநாள் அங்கிருந்த ஒரு மலையில் ஒரு பூதம் வந்து குடியேறியது.பார்ப்பதற்குப் பயங்கரமான அந்தப் பூதம் நகருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களை மடக்கிப் புதிர் போடும். அப்புதிருக்குச் சரியான விடையைக் கூற இயலாதவர்களை எடுத்து விழுங்கிவிடும். அது போட்ட புதிரை யாருமே விடுவிக்கவில்லை. பூதத்தால் வழி மறிக்கப் பட்டவர்கள் அனைவருமே உயிரிழந்தார்கள். அதனால் அயல் நாட்டினர் வருகை குறைந்தது. வியாபாரம் படுத்துவிட்டது. அந்த நகரின் மக்கள் அனைவருமே நாளை யார் உயிர் போகுமோ என்று அஞ்சியபடியே களையிழந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் தூத்துக்குடியை விட்டு வெகு காலம் வெளியூரில் வேலை தேடிச் சென்றிருந்த பரஞ்சோதி என்ற மாவீரர் ஒருவர் தனது தாய் தந்தையரைக் கான தூத்துக்குடியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.பூதம் வாழ்ந்த மலைக் குன்றை அவரது வாகனம் கடக்கும் சமயம் அவரை பூதம் வழி மறித்தது.


பரஞ்சோதியை ஏற இறங்கப் பார்த்த பூதம், " நான் போடும் புதிரை நீ விடுவிக்கவேண்டும். அப்படிச் செய்தால் நான் இங்கிருந்து போய்விடுவேன். நீ சரியான பதிலைக் கூறி விடுவிக்காவிட்டால், உன்னை விழுங்கி விடுவேன்." என்றது.

அஞ்சா நெஞ்சனான பரஞ்சோதி, " பூதமே...நீ உடனே உனது புதிரைக் கூறு. நான் விடுவிக்கிறேன்" என்றார்.

" காலையில் நான்கு கால்............. நடுப்பகலில் இரண்டு கால்............மாலையில் மூன்று கால். ....இப்படியாக இந்த உலகில் வாழும் ஜீவன் எது?. நன்றாக ஆலோசித்து இதற்குப் பதிலைக் கூறு" என்றது பூதம்.

அந்தப் பூதத்துக்கு பரஞ்சோதியைப் பற்றித் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் இவ்வளவு சுலபமான புதிரைப் போட்டிருக்காது.
ஆனால் இதுவரை இதே புதிரைப் போட்டுதான் வழிமறித்த அத்தனை ஆட்களையும் கொன்றது அந்தப் பூதம் அதனால் பரஞ்சோதியிடமும் அதே புதிரைப் போட்டது.

சற்றே ஆலோசனை செய்த பரஞ்சோதி, புன் முருவல் பூத்தார்.
பூதத்தின் புதிருக்கு சரியான விடையைக் கூறினார்.

பதிலைக் கேட்டுத் திகைத்த பூதம், தனது தோல்வியை ஒத்துக்கொண்டு, பரஞ்சோதிக்கு வாழ்த்துக்களைக் கூறிப் பாராட்டிவிட்டு, அந்த இடத்தைக் காலிசெய்தது.


நகர மக்களும் பூதத்தின் பிடியில் இருந்து மீண்டார்கள். 
வணிகமும் முன்பு போல் செழித்தது.....

அதெல்லாம் இருக்கட்டும், பூதத்துக்கு பரஞ்சோதி கூறிய விடை என்ன?

புதிர் விடை :

கண்டிப்பாக மனிதனாகத் தான் இருக்க வேண்டும்.

காலை, நடுபகல், மாலை என்பது ஒரு நாள் நேரத்தை குறிப்பதை விட ஒரு மனிதன் மூன்று கால நிலையை குறிக்கிறது.

காலையில் நான்கு கால் என்பது குழந்தை பருவத்தில் நான்கு காலில் தவழ்கிறான். நடுபகல் என்பது இளமை காலம், அதில் தெம்பாக இரண்டு கால்களால் வாழ்க்கை நடத்துகிறான். மாலை என்பது முதுமைக்காலம், அதில் நடை தளர்ந்து கம்பு ஊன்றி நடக்கிறான். ஆகையால் மூன்று கால் கணக்காகி விடுகிறது.

சோழ நாட்டு மன்னனும் அவரது மகளின் திருமணமும் - புதிர் கதை

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னன் இறந்துவிட , அப்போது வயது 18 ஆகியிருந்த அவனது மகனான கரிகாலனை, அரசனாக மக்கள் முடி சூட்டினார்கள். அவன் சிறுவனாக இருந்த போதிலும், சிறந்த அறிஞனாக விளங்கினான்.

மக்களும் நேர்மையுடனும், நல்ல நடத்தையுடனும் இருந்தார்கள்.

அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு ஊரில் ஒரு முதியவர், தனது மகளுக்கு மணம் செய்துவைக்க வேண்டும் என்று கருதினார்.
அந்த திருமணச் செலவிற்காக, தனது நிலத்தை விற்க முடிவு செய்தார்.


இன்னொரு முதியவரோ, இளைஞனான தனது மகன் உழைத்துப் பொருள் சேர்க்கவேண்டும் என்பதற்காக அந்த நிலத்தை வாங்கினார்.
நிலத்தை வாங்கியபின், தன் மகனுடன் அந்த நிலத்தை பண்படுத்துவதற்காக ஏர் பூட்டி உழுதார்.
ஏரின் கொழு முனை ஏதோ ஒன்றில் சிக்கிக்கொள்ள அது என்னவென்று தோண்டிப் பார்த்தார்.
அங்கே ஒரு குடம் நிறைய பொற்காசுகள் புதைந்திருப்பதைக் கண்டார்.
அந்தப் புதையலை எடுத்துக்கொண்டு நேராக நிலத்தை விற்றவரிடம் வந்தார்.

"ஐயா....பாருங்கள்....ஒரு நல்ல செய்தி. தங்களிடம் இருந்த நான் வாங்கிய நிலத்தில் இந்தப் புதையல் அகப்பட்டது.
நீங்கள் நிலத்தைத்தான் எனக்கு விற்றீர்கள்.
அதனால் நிலத்தின் உள்ளே இருந்த புதையல் உங்களுக்குத்தான் சொந்தமானது.
ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி புதையல் குடத்தை கொடுத்தார்.

ஆனால் நிலத்தை விற்றவரோ, " எப்போது நான் நிலத்தை உமக்கு விற்றேனோ, அப்போதே அதில் கிடைக்கும் அனைத்தும் உமக்குத்தான் சொந்தம். அதனால் புதையலைத் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அதை வாங்க மறுத்தார்.

இப்படிப் பேசிப் பேசி, ஊர்ப் பொது மன்றத்துக்கு வழக்கு வந்துவிட்டது.
மன்றத்திலும் யாராலும் இந்தப் பிரச்சினைக்குத் தகுந்த தீர்ப்புக் கூற முடியவில்லை.
அதனால் அரசவைக்கு வழக்கை எடுத்துப் போனார்கள்.

அங்கே அரியனையில் அமர்ந்திருந்த கரிகாலனைக் கண்டதும், " பெரியவர்களாலேயே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கூற இயலவில்லை. இந்தச் சிறுவன் எப்படித் தீர்ப்புக்கூற இயலும்" என்று மனதுள் நினைத்துக்கொண்டார்கள் அந்தப் பெரியவர்கள் இருவரும்..

அவர்களது முகபாவத்தைக் கொண்டே, அவர்களின் மன ஓட்டத்தை அறிந்த கரிகாலன், " ஐயா...நீங்கள் ஏதோ பெரும் வழக்கை இங்கே கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வழக்கை ஆராய்ந்து தீர்வுகானும் தகுதி எனக்கில்லை.. இருவரும் சற்று நேரம் பொருத்திருங்கள். ஒரு முதிய அறிஞரை நான் அனுப்பி வைக்கிறேன். அவர் சரியான தீர்வு கானுவார்" என்று கூறிவிட்டுக் கரிகாலன் அந்தப்புரம் சென்றான்.
சற்று நேரத்தில், தாடியெல்லாம் நரைத்த, பழுத்த பழம் போன்ற ஒரு முதியவர் அரசபைக்கு வந்தார்.

அவரிடம், இருவரும் தங்கள் வழக்கை கூறினார்கள்.எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்ட முதிய அறிஞர், புண்ணகை செய்தபடி, இருவருமே மனம் மகிழும் வண்ணம் நல்ல தீர்ப்பு ஒன்றைக் கூறினார்.
அவரது தீர்ப்ப்பில் மகிழ்ந்த முதியவர்கள் இருவரும் அறிஞரை வணங்கினார்கள். அப்போது, அந்த அறிஞர், தனது நரைத்த தாடி மீசையை எடுத்தார். அங்கே சிறுவனான கரிகாலன் இருந்தான்.

அதைக் கண்டு வியந்த மக்கள் கரிகாலனின் அறிவாற்றலை வியந்து பாராட்டினார்கள்.

நண்பர்களே....அனைவரும் பாராட்டும்படி கரிகாலன் என்ன தீர்ப்பு கூறினான்?

புதிர் விடை :
கரிகாலன் நிலத்தை விற்றவரின் பெண்ணிற்கும், நிலத்தை வாங்கியவரின் மகனுக்கும் திருமணம் சம்பந்தம் பேசி முடித்திருப்பார்.
உழைப்பால் உயர வைக்க நினைத்த இளைஞனுக்கு அங்கே கிடைத்த புதையல் சீதனமாக கொடுத்த மாதிரியாக எடுத்துக் கொள்ளச் சொல்வார்.

சீடனின் நல்ல எண்ணமும், குருவின் சாபமும் ! - புதிர் கதை

முன்னொரு காலத்தில், கங்கைக் கரையில் ஆசிரமம் அமைத்துத் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் இராம பிரானிடம் பேரன்பும், பெரும் பக்தியும் கொண்டவர் ... எப்போதும் இராம நாமத்தின் பெருமைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்...அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். 

அவரது சீடன் ஒருவன் வழக்கம்போல அதிகாலையில் கங்கையில் நீராடச் சென்றான்.அப்போது யாரோ ஒரு முதியவர், தற்கொலை செய்து கொள்வதற்காக சீடன் குளித்துக்கொண்டிருந்த இடத்துக்குப் பக்கமாக நதியில் குதித்தார். சீடன் பாய்ந்து சென்று அவரைக் காப்பாற்றி, " ஐயா, நீங்கள் யார்?.ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள்?.உயிரைப் போக்கிக்கொள்வது கொடிய பாவம் அல்லவா?" என்று கேட்டான்.


அதற்கு அந்த முதியவர், " நான் இந்தக் காசி மாநகரத்தில் ஒரு வணிகன்.முன்வினைப் பயனோ என்னவோ, சில ஆண்டுகளுக்கு முன் என்னைத் தொழுநோய் பிடித்துக்கொண்டது.நான் செய்துகொள்ளாத வைத்தியம் இல்லை.எந்தப் பயனும் ஏற்படவில்லை.இந்தக் கொடிய நோயுடன் வாழ்வதைவிட இறந்து போவதே மேல் என்றுதான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்" என்றார்.

இதை எல்லாம் கேட்ட சீடன், " ஐயா.... கவலைப் படாதீர்கள்.இராம நாமத்தை நீங்கள் மூன்றுமுறை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூறியபடியே கங்கை நதியில் மூழ்குங்கள். உங்கள் நோய் குணமாவதுடன், உங்களைப் பிடித்திருந்த சகல பாவங்களும் நீங்கி, உங்கள் ஆத்மா தூய்மை அடையும்" என்றான்.

அவரும், இராம நாமத்தை மூன்று முறை சொல்லியபடியே கங்கையில் மூழ்கி எழுந்தார்.

என்ன வியப்பு?!!!!...தொழுநோய் முழுவதும் அவர் உடலை விட்டு விலகியிருந்தது.. 
அதனால் மகிழ்ச்சியடைந்த அவர், சீடனை வணங்கி நன்றி கூறிவிட்டு தன் வழியே சென்றார்.

இதையெல்லாம் அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள், ஆச்சர்யம் அடைந்தார்கள். ஊரெங்கும் இதே பேச்சாகியது.

நடந்ததை எல்லாம் துறவியும் கேள்விப்பட்டார். கடும் கோபம் கொண்டார். சீடனை அழைத்து, " பாவி........இராம நாமத்தின் மகிமையை, பெருமையை நீ கெடுத்துவிட்டாயே!!!!!!....நீ அடுத்த பிறப்பில் கீழ்ப் பிறவியில் பிறந்து துன்பங்களை அனுபவிப்பாயாக...".என்று சாபம் கொடுத்தார்.

நண்பர்களே.................. சீடனைப் பாராட்ட வேண்டிய துறவி, ஏன் அவனுக்குச் சாபம் கொடுத்தார்.

புதிர் விடை :

ஒருமுறை இராம நாமத்தைச் சொன்னாலே போதும். அதுவே உடற்பிணியையும், பிறவிப் பிணியையும் நீக்க வல்லது. 
அப்படி இருக்கும்போது, எதற்காக மூன்றுமுறை இராம நாமத்தைச் சொல்லும்படி கூறி அதன் பெருமையைக் கெடுத்தாய்" என்றுதான் சாபம் கொடுத்தார் துறவி.

நாட்டின் பஞ்சமும் இளவரசியின் மணவாளனும் ! - புதிர் கதை

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.அவனுக்குப் பெண்குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த சோதிடர்கள், " இந்தப் பெண்ணுக்குப் பதினேழு வயது நடக்கும்போது, நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்படும்.இவளது பதினேழாவது பிறந்த நாளன்று, நம் தலைநகருக்குள் வெளியில் இருந்து முதன் முதலாக வருகின்ற ஆணுக்கு இவளைத் திருமணம் செய்து தரவேண்டும். அவனுக்கு என்ன குறை இருந்தாலும் மணம் முடித்த உடனே நீங்கிவிடும்.நாட்டின் பஞ்சமும் மாறி வளம் உண்டாகும். " என்று கூறினார்கள்.

சோதிடர்கள் சொன்னபடியே அவளது பதினேழாவது வயதில், கொடிய பஞ்சம் உண்டாகியது.நாட்டு மக்கள் உணவுக்கு மிகுந்த சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். மாதங்கள் விரைந்தோடியது. 

அந்த நாட்டிலே உள்ள ஒரு ஊரில், குருடன் ஒருவனும், நொண்டி ஒருவனும் நண்பர்களாக இருந்தார்கள்.அவர்கள் இருவருமே பிச்சை எடுத்துதான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

பஞ்சத்தின் காரணமாக அவர்கள் இருந்த பகுதியில் உணவு கிடைக்காமல் வாடினார்கள்.எப்படியாவது தலை நகரத்தை அடைந்துவிட்டால், சிறிதேனும் உணவு கிடைக்கும் என்று நினைத்து, தலை நகருக்குப் போக முடிவு செய்தார்கள். குருடனின் தோள்மேல் நொண்டி அமர்ந்து கொண்டான். குருடனுக்கு நொண்டி வழி கூற, குருடன் நொண்டியைச் சுமந்து கொண்டு நடந்து சென்றான்.

இரவு முழுவதும் நடந்து காலை வேளையில் தலை நகரை நெருங்கினார்கள்....அவர்கள் தலை நகரை நெருங்கிய அன்றுதான் இளவரசிக்கு பதினெட்டாவது பிறந்த நாள்.அதனால் அதிகாலையிலேயே வீரர்களை அழைத்த அரசன், அன்று காலை நகருக்குள் முதன் முதலாக நுழையும் ஆண் மகனே இளவரசிக்கு கணவனாக ஆகப் போகிறவன். அவன் யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து அரண்மனைக்கு அழைத்துவரும்படி கட்டளையிட்டிருந்தான்.


வீரர்கள் தலை நகரின் முக்கிய நுழைவு வாயிலில் காத்திருந்தார்கள். அப்போதுதான் நொண்டியை தனது தோள்மீது சுமந்தபடி குருடன் நகருக்குள் நுழைந்தான்.அவர்களைக் கண்ட வீரர்கள், அந்த இருவரில், யாரை முதன்முதலாக நுழைந்தவர் என்று அழைத்துப் போவது என்று குழப்பம் அடைந்தார்கள்.அதனால் அந்த இருவரிடமும் விஷயத்தைக் கூறி, இருவருக்குமே மாலை மரியாதைகள் செய்து அரசனிடம் அழைத்துப் போனார்கள்.

இருவரை காவலர்கள் அழைத்து வந்திருப்பதைக் கண்டான். அவர்கள் எப்படி நகரில் நுழைந்தார்கள் என்ற விபரத்தையும் காவலர்கள் அரசனிடம் கூறினார்கள்.இப்போது அரசனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.இந்த இருவரில் யாரை முதலில் நகருக்குள் நுழைந்தவனாக எடுத்துக்கொள்வது என்று அரசனால் தீர்மாணிக்க இயலவில்லை.இளவரசியை தனக்குத்தான் மணம் செய்து தரவேண்டும் என்று, குருடனும், நொண்டியும் வாதிட்டார்கள்..


நண்பர்களே, நீங்கள்தான் அந்த அரசனுக்கு, இருவரில் யார் தகுதியானவர் என்று கூறி சிக்கலைத் தீர்க்கவேண்டும்.?

புதிர் விடை : இளவரசி நொண்டியைத்தான் மணக்கவேண்டும்.
ஏனென்றால், நொண்டி , குருடனின் தோள்மீது அமர்ந்து வந்திருக்கிறான்.
ஆகையால் குருடன் நொண்டியைச் சுமக்கும் வாகனமாகத்தான் இருந்திருக்கிறான்.

கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்திலேயே ஒரு ஊசியும் - புதிர் கதை

திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மையாருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடைபெற்றது ! 

திருமணமான அன்று முதன்முதலாக வாசுகி அம்மையார் தன் கணவனுக்கு உணவு பறிமாற வந்தார். அப்போது திருவள்ளுவர் அவளைப் பார்த்து, " இனி நீ எனக்கு உணவு பறிமாறும்போதெல்லாம், ஒரு கொட்டாங்கச்சியில் தண்ணீரும், அதன் பக்கத்திலேயே ஒரு ஊசியும் வைத்துவிடு" என்றார்.

தன் கணவர் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்று வாசுகி அம்மையாருக்குப் புரியவில்லை. இருந்தாலும் கணவரின் சொல்லை மீறக்கூடாதே என்ற எண்ணத்தில், நாள்தோரும் வள்ளுவர் கூறியபடியே செய்துவந்தாள்.

பல ஆண்டுகள் கழிந்தன. திருவள்ளுவர் ஒரு முறைகூட அந்த கொட்டாங்கச்சி நீரையும், ஊசியையும் உபயோகப்படுத்தவில்லை.வாசுகி அம்மையாரும் முதுமையடைந்து, நோயில் வீழ்ந்து உயிர் பிரியும் தருணத்தில், " அன்பரே, என் மனதில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இதுவரை விடை கிடைக்கவில்லை.சாப்பிடும்போது, கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்திலேயே ஒரு ஊசியும் வைக்கும்படி கூறியிருந்தீர்கள்.

நானும் ஏன் என்று கேட்காமல் அதை செய்துவந்தேன். நீங்கள் ஒருமுறைகூட அதை உபயோகிக்கவில்லை. ஏன் அவற்றை வைக்கச் சொன்னீர்கள்" என்று கேட்டார்கள்.

வள்ளுவர் அதற்கு என்ன பதில் கூறியுருப்பார்?

புதிர் விடை :
உணவருந்தும் போது கீழே சிந்துகின்ற உணவை(சோற்றை)
ஊசியால் குத்தி கொட்டாங்கச்சியில் உள்ள தண்ணீரில்
கழுவி மீண்டும் உட்கொள்வதற்காக தான் என்று கூறியிருப்பார்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்