Tuesday, December 17, 2013

தெண்பாண்டிச் சீமையும் , பூதத்தின் ஆட்டூழியமும் - புதிர் கதை

முன்னொரு காலத்தில் தெண்பாண்டிச் சீமை மிகுந்த சீரும் சிறப்புடனும் விளங்கியது. முத்துக்குளிக்கும் மீனவர் கூட்டம் கடலில் இருந்து கொண்டு வந்து குவித்த முத்துக்களை வாங்கிச் செல்ல சிரேக்க யவனரும், அராபியரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். அவர்கள் வரும்போது கொண்டு வந்த சாம்பிராணியும், அத்தரும், உப்பளங்களின் வாசனையையும் மீறி, தூத்துக்குடி நகரையே பரிமளிக்கச் செய்து கொண்டிருந்தது. அராபியர்களின் குதிரைகள் காற்றெனப் பாய்ந்து ஓடிய குளம்போசைகள் வீரர்களுக்கு மது அருந்தாமலேயே உற்சாகத்தை அள்ளி அள்ளித் தந்தது.

இப்படிப்பட்ட சீர் மிகுந்த தூத்துக்குடி நகரின் ஒரு பக்கம் கடல். மற்ற மூன்று திசைகளிலும் குன்றுகளும் மலைகளும் இருந்த காலம் அது. ஒருநாள் அங்கிருந்த ஒரு மலையில் ஒரு பூதம் வந்து குடியேறியது.பார்ப்பதற்குப் பயங்கரமான அந்தப் பூதம் நகருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களை மடக்கிப் புதிர் போடும். அப்புதிருக்குச் சரியான விடையைக் கூற இயலாதவர்களை எடுத்து விழுங்கிவிடும். அது போட்ட புதிரை யாருமே விடுவிக்கவில்லை. பூதத்தால் வழி மறிக்கப் பட்டவர்கள் அனைவருமே உயிரிழந்தார்கள். அதனால் அயல் நாட்டினர் வருகை குறைந்தது. வியாபாரம் படுத்துவிட்டது. அந்த நகரின் மக்கள் அனைவருமே நாளை யார் உயிர் போகுமோ என்று அஞ்சியபடியே களையிழந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் தூத்துக்குடியை விட்டு வெகு காலம் வெளியூரில் வேலை தேடிச் சென்றிருந்த பரஞ்சோதி என்ற மாவீரர் ஒருவர் தனது தாய் தந்தையரைக் கான தூத்துக்குடியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.பூதம் வாழ்ந்த மலைக் குன்றை அவரது வாகனம் கடக்கும் சமயம் அவரை பூதம் வழி மறித்தது.


பரஞ்சோதியை ஏற இறங்கப் பார்த்த பூதம், " நான் போடும் புதிரை நீ விடுவிக்கவேண்டும். அப்படிச் செய்தால் நான் இங்கிருந்து போய்விடுவேன். நீ சரியான பதிலைக் கூறி விடுவிக்காவிட்டால், உன்னை விழுங்கி விடுவேன்." என்றது.

அஞ்சா நெஞ்சனான பரஞ்சோதி, " பூதமே...நீ உடனே உனது புதிரைக் கூறு. நான் விடுவிக்கிறேன்" என்றார்.

" காலையில் நான்கு கால்............. நடுப்பகலில் இரண்டு கால்............மாலையில் மூன்று கால். ....இப்படியாக இந்த உலகில் வாழும் ஜீவன் எது?. நன்றாக ஆலோசித்து இதற்குப் பதிலைக் கூறு" என்றது பூதம்.

அந்தப் பூதத்துக்கு பரஞ்சோதியைப் பற்றித் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் இவ்வளவு சுலபமான புதிரைப் போட்டிருக்காது.
ஆனால் இதுவரை இதே புதிரைப் போட்டுதான் வழிமறித்த அத்தனை ஆட்களையும் கொன்றது அந்தப் பூதம் அதனால் பரஞ்சோதியிடமும் அதே புதிரைப் போட்டது.

சற்றே ஆலோசனை செய்த பரஞ்சோதி, புன் முருவல் பூத்தார்.
பூதத்தின் புதிருக்கு சரியான விடையைக் கூறினார்.

பதிலைக் கேட்டுத் திகைத்த பூதம், தனது தோல்வியை ஒத்துக்கொண்டு, பரஞ்சோதிக்கு வாழ்த்துக்களைக் கூறிப் பாராட்டிவிட்டு, அந்த இடத்தைக் காலிசெய்தது.


நகர மக்களும் பூதத்தின் பிடியில் இருந்து மீண்டார்கள். 
வணிகமும் முன்பு போல் செழித்தது.....

அதெல்லாம் இருக்கட்டும், பூதத்துக்கு பரஞ்சோதி கூறிய விடை என்ன?

புதிர் விடை :

கண்டிப்பாக மனிதனாகத் தான் இருக்க வேண்டும்.

காலை, நடுபகல், மாலை என்பது ஒரு நாள் நேரத்தை குறிப்பதை விட ஒரு மனிதன் மூன்று கால நிலையை குறிக்கிறது.

காலையில் நான்கு கால் என்பது குழந்தை பருவத்தில் நான்கு காலில் தவழ்கிறான். நடுபகல் என்பது இளமை காலம், அதில் தெம்பாக இரண்டு கால்களால் வாழ்க்கை நடத்துகிறான். மாலை என்பது முதுமைக்காலம், அதில் நடை தளர்ந்து கம்பு ஊன்றி நடக்கிறான். ஆகையால் மூன்று கால் கணக்காகி விடுகிறது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்