Tuesday, December 17, 2013

நாட்டின் பஞ்சமும் இளவரசியின் மணவாளனும் ! - புதிர் கதை

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.அவனுக்குப் பெண்குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த சோதிடர்கள், " இந்தப் பெண்ணுக்குப் பதினேழு வயது நடக்கும்போது, நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்படும்.இவளது பதினேழாவது பிறந்த நாளன்று, நம் தலைநகருக்குள் வெளியில் இருந்து முதன் முதலாக வருகின்ற ஆணுக்கு இவளைத் திருமணம் செய்து தரவேண்டும். அவனுக்கு என்ன குறை இருந்தாலும் மணம் முடித்த உடனே நீங்கிவிடும்.நாட்டின் பஞ்சமும் மாறி வளம் உண்டாகும். " என்று கூறினார்கள்.

சோதிடர்கள் சொன்னபடியே அவளது பதினேழாவது வயதில், கொடிய பஞ்சம் உண்டாகியது.நாட்டு மக்கள் உணவுக்கு மிகுந்த சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். மாதங்கள் விரைந்தோடியது. 

அந்த நாட்டிலே உள்ள ஒரு ஊரில், குருடன் ஒருவனும், நொண்டி ஒருவனும் நண்பர்களாக இருந்தார்கள்.அவர்கள் இருவருமே பிச்சை எடுத்துதான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

பஞ்சத்தின் காரணமாக அவர்கள் இருந்த பகுதியில் உணவு கிடைக்காமல் வாடினார்கள்.எப்படியாவது தலை நகரத்தை அடைந்துவிட்டால், சிறிதேனும் உணவு கிடைக்கும் என்று நினைத்து, தலை நகருக்குப் போக முடிவு செய்தார்கள். குருடனின் தோள்மேல் நொண்டி அமர்ந்து கொண்டான். குருடனுக்கு நொண்டி வழி கூற, குருடன் நொண்டியைச் சுமந்து கொண்டு நடந்து சென்றான்.

இரவு முழுவதும் நடந்து காலை வேளையில் தலை நகரை நெருங்கினார்கள்....அவர்கள் தலை நகரை நெருங்கிய அன்றுதான் இளவரசிக்கு பதினெட்டாவது பிறந்த நாள்.அதனால் அதிகாலையிலேயே வீரர்களை அழைத்த அரசன், அன்று காலை நகருக்குள் முதன் முதலாக நுழையும் ஆண் மகனே இளவரசிக்கு கணவனாக ஆகப் போகிறவன். அவன் யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து அரண்மனைக்கு அழைத்துவரும்படி கட்டளையிட்டிருந்தான்.


வீரர்கள் தலை நகரின் முக்கிய நுழைவு வாயிலில் காத்திருந்தார்கள். அப்போதுதான் நொண்டியை தனது தோள்மீது சுமந்தபடி குருடன் நகருக்குள் நுழைந்தான்.அவர்களைக் கண்ட வீரர்கள், அந்த இருவரில், யாரை முதன்முதலாக நுழைந்தவர் என்று அழைத்துப் போவது என்று குழப்பம் அடைந்தார்கள்.அதனால் அந்த இருவரிடமும் விஷயத்தைக் கூறி, இருவருக்குமே மாலை மரியாதைகள் செய்து அரசனிடம் அழைத்துப் போனார்கள்.

இருவரை காவலர்கள் அழைத்து வந்திருப்பதைக் கண்டான். அவர்கள் எப்படி நகரில் நுழைந்தார்கள் என்ற விபரத்தையும் காவலர்கள் அரசனிடம் கூறினார்கள்.இப்போது அரசனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.இந்த இருவரில் யாரை முதலில் நகருக்குள் நுழைந்தவனாக எடுத்துக்கொள்வது என்று அரசனால் தீர்மாணிக்க இயலவில்லை.இளவரசியை தனக்குத்தான் மணம் செய்து தரவேண்டும் என்று, குருடனும், நொண்டியும் வாதிட்டார்கள்..


நண்பர்களே, நீங்கள்தான் அந்த அரசனுக்கு, இருவரில் யார் தகுதியானவர் என்று கூறி சிக்கலைத் தீர்க்கவேண்டும்.?

புதிர் விடை : இளவரசி நொண்டியைத்தான் மணக்கவேண்டும்.
ஏனென்றால், நொண்டி , குருடனின் தோள்மீது அமர்ந்து வந்திருக்கிறான்.
ஆகையால் குருடன் நொண்டியைச் சுமக்கும் வாகனமாகத்தான் இருந்திருக்கிறான்.

3 comments:

  1. அங்கவீனர்களை அவரவர்களின் பழுதுபட்ட அங்கங்களைக் கூறி அழைப்பது நாகரீகக் குறைவு :(

    ReplyDelete
  2. age mistake above the pic 17 below the pic 18

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்