Tuesday, December 17, 2013

சோழ நாட்டு மன்னனும் அவரது மகளின் திருமணமும் - புதிர் கதை

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னன் இறந்துவிட , அப்போது வயது 18 ஆகியிருந்த அவனது மகனான கரிகாலனை, அரசனாக மக்கள் முடி சூட்டினார்கள். அவன் சிறுவனாக இருந்த போதிலும், சிறந்த அறிஞனாக விளங்கினான்.

மக்களும் நேர்மையுடனும், நல்ல நடத்தையுடனும் இருந்தார்கள்.

அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு ஊரில் ஒரு முதியவர், தனது மகளுக்கு மணம் செய்துவைக்க வேண்டும் என்று கருதினார்.
அந்த திருமணச் செலவிற்காக, தனது நிலத்தை விற்க முடிவு செய்தார்.


இன்னொரு முதியவரோ, இளைஞனான தனது மகன் உழைத்துப் பொருள் சேர்க்கவேண்டும் என்பதற்காக அந்த நிலத்தை வாங்கினார்.
நிலத்தை வாங்கியபின், தன் மகனுடன் அந்த நிலத்தை பண்படுத்துவதற்காக ஏர் பூட்டி உழுதார்.
ஏரின் கொழு முனை ஏதோ ஒன்றில் சிக்கிக்கொள்ள அது என்னவென்று தோண்டிப் பார்த்தார்.
அங்கே ஒரு குடம் நிறைய பொற்காசுகள் புதைந்திருப்பதைக் கண்டார்.
அந்தப் புதையலை எடுத்துக்கொண்டு நேராக நிலத்தை விற்றவரிடம் வந்தார்.

"ஐயா....பாருங்கள்....ஒரு நல்ல செய்தி. தங்களிடம் இருந்த நான் வாங்கிய நிலத்தில் இந்தப் புதையல் அகப்பட்டது.
நீங்கள் நிலத்தைத்தான் எனக்கு விற்றீர்கள்.
அதனால் நிலத்தின் உள்ளே இருந்த புதையல் உங்களுக்குத்தான் சொந்தமானது.
ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி புதையல் குடத்தை கொடுத்தார்.

ஆனால் நிலத்தை விற்றவரோ, " எப்போது நான் நிலத்தை உமக்கு விற்றேனோ, அப்போதே அதில் கிடைக்கும் அனைத்தும் உமக்குத்தான் சொந்தம். அதனால் புதையலைத் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அதை வாங்க மறுத்தார்.

இப்படிப் பேசிப் பேசி, ஊர்ப் பொது மன்றத்துக்கு வழக்கு வந்துவிட்டது.
மன்றத்திலும் யாராலும் இந்தப் பிரச்சினைக்குத் தகுந்த தீர்ப்புக் கூற முடியவில்லை.
அதனால் அரசவைக்கு வழக்கை எடுத்துப் போனார்கள்.

அங்கே அரியனையில் அமர்ந்திருந்த கரிகாலனைக் கண்டதும், " பெரியவர்களாலேயே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கூற இயலவில்லை. இந்தச் சிறுவன் எப்படித் தீர்ப்புக்கூற இயலும்" என்று மனதுள் நினைத்துக்கொண்டார்கள் அந்தப் பெரியவர்கள் இருவரும்..

அவர்களது முகபாவத்தைக் கொண்டே, அவர்களின் மன ஓட்டத்தை அறிந்த கரிகாலன், " ஐயா...நீங்கள் ஏதோ பெரும் வழக்கை இங்கே கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வழக்கை ஆராய்ந்து தீர்வுகானும் தகுதி எனக்கில்லை.. இருவரும் சற்று நேரம் பொருத்திருங்கள். ஒரு முதிய அறிஞரை நான் அனுப்பி வைக்கிறேன். அவர் சரியான தீர்வு கானுவார்" என்று கூறிவிட்டுக் கரிகாலன் அந்தப்புரம் சென்றான்.
சற்று நேரத்தில், தாடியெல்லாம் நரைத்த, பழுத்த பழம் போன்ற ஒரு முதியவர் அரசபைக்கு வந்தார்.

அவரிடம், இருவரும் தங்கள் வழக்கை கூறினார்கள்.எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்ட முதிய அறிஞர், புண்ணகை செய்தபடி, இருவருமே மனம் மகிழும் வண்ணம் நல்ல தீர்ப்பு ஒன்றைக் கூறினார்.
அவரது தீர்ப்ப்பில் மகிழ்ந்த முதியவர்கள் இருவரும் அறிஞரை வணங்கினார்கள். அப்போது, அந்த அறிஞர், தனது நரைத்த தாடி மீசையை எடுத்தார். அங்கே சிறுவனான கரிகாலன் இருந்தான்.

அதைக் கண்டு வியந்த மக்கள் கரிகாலனின் அறிவாற்றலை வியந்து பாராட்டினார்கள்.

நண்பர்களே....அனைவரும் பாராட்டும்படி கரிகாலன் என்ன தீர்ப்பு கூறினான்?

புதிர் விடை :
கரிகாலன் நிலத்தை விற்றவரின் பெண்ணிற்கும், நிலத்தை வாங்கியவரின் மகனுக்கும் திருமணம் சம்பந்தம் பேசி முடித்திருப்பார்.
உழைப்பால் உயர வைக்க நினைத்த இளைஞனுக்கு அங்கே கிடைத்த புதையல் சீதனமாக கொடுத்த மாதிரியாக எடுத்துக் கொள்ளச் சொல்வார்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்