Tuesday, December 17, 2013

சீடனின் நல்ல எண்ணமும், குருவின் சாபமும் ! - புதிர் கதை

முன்னொரு காலத்தில், கங்கைக் கரையில் ஆசிரமம் அமைத்துத் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் இராம பிரானிடம் பேரன்பும், பெரும் பக்தியும் கொண்டவர் ... எப்போதும் இராம நாமத்தின் பெருமைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்...அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். 

அவரது சீடன் ஒருவன் வழக்கம்போல அதிகாலையில் கங்கையில் நீராடச் சென்றான்.அப்போது யாரோ ஒரு முதியவர், தற்கொலை செய்து கொள்வதற்காக சீடன் குளித்துக்கொண்டிருந்த இடத்துக்குப் பக்கமாக நதியில் குதித்தார். சீடன் பாய்ந்து சென்று அவரைக் காப்பாற்றி, " ஐயா, நீங்கள் யார்?.ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள்?.உயிரைப் போக்கிக்கொள்வது கொடிய பாவம் அல்லவா?" என்று கேட்டான்.


அதற்கு அந்த முதியவர், " நான் இந்தக் காசி மாநகரத்தில் ஒரு வணிகன்.முன்வினைப் பயனோ என்னவோ, சில ஆண்டுகளுக்கு முன் என்னைத் தொழுநோய் பிடித்துக்கொண்டது.நான் செய்துகொள்ளாத வைத்தியம் இல்லை.எந்தப் பயனும் ஏற்படவில்லை.இந்தக் கொடிய நோயுடன் வாழ்வதைவிட இறந்து போவதே மேல் என்றுதான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்" என்றார்.

இதை எல்லாம் கேட்ட சீடன், " ஐயா.... கவலைப் படாதீர்கள்.இராம நாமத்தை நீங்கள் மூன்றுமுறை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூறியபடியே கங்கை நதியில் மூழ்குங்கள். உங்கள் நோய் குணமாவதுடன், உங்களைப் பிடித்திருந்த சகல பாவங்களும் நீங்கி, உங்கள் ஆத்மா தூய்மை அடையும்" என்றான்.

அவரும், இராம நாமத்தை மூன்று முறை சொல்லியபடியே கங்கையில் மூழ்கி எழுந்தார்.

என்ன வியப்பு?!!!!...தொழுநோய் முழுவதும் அவர் உடலை விட்டு விலகியிருந்தது.. 
அதனால் மகிழ்ச்சியடைந்த அவர், சீடனை வணங்கி நன்றி கூறிவிட்டு தன் வழியே சென்றார்.

இதையெல்லாம் அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள், ஆச்சர்யம் அடைந்தார்கள். ஊரெங்கும் இதே பேச்சாகியது.

நடந்ததை எல்லாம் துறவியும் கேள்விப்பட்டார். கடும் கோபம் கொண்டார். சீடனை அழைத்து, " பாவி........இராம நாமத்தின் மகிமையை, பெருமையை நீ கெடுத்துவிட்டாயே!!!!!!....நீ அடுத்த பிறப்பில் கீழ்ப் பிறவியில் பிறந்து துன்பங்களை அனுபவிப்பாயாக...".என்று சாபம் கொடுத்தார்.

நண்பர்களே.................. சீடனைப் பாராட்ட வேண்டிய துறவி, ஏன் அவனுக்குச் சாபம் கொடுத்தார்.

புதிர் விடை :

ஒருமுறை இராம நாமத்தைச் சொன்னாலே போதும். அதுவே உடற்பிணியையும், பிறவிப் பிணியையும் நீக்க வல்லது. 
அப்படி இருக்கும்போது, எதற்காக மூன்றுமுறை இராம நாமத்தைச் சொல்லும்படி கூறி அதன் பெருமையைக் கெடுத்தாய்" என்றுதான் சாபம் கொடுத்தார் துறவி.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்