Monday, December 23, 2013

கொக்குக்கு ஒரு கால்தானே ! - புதிர் கதை

கொக்குக்கு ஒரு கால்தானே ! 

வேட்டைக்குச்சென்று திரும்பிய முதலாளி ஒருவர் வேட்டை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தான் வேட்டையாடிக் கொண்டுவந்திருந்த ஒரு கொக்கைச் சமையல் காரரிடம் கொடுத்து , இரவு உணவுக்கு சுவையாகச் சமைத்து வைக்கும்படி கூறினார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உறித்து, பக்குவமாக மசாலா போட்டுக் குழம்பு வைத்தான்.நன்றாக வெந்ததும், குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது.ஆசை அடக்க முடியாமல், கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தவன், கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கால் முழுவதையும் தின்றுவிட்டான்.உண்ட பின்புதான், முதலாளி கேட்டால் என்ன செய்வது என்ற பயம் ஏற்பட்டது. சரி...சரி எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்று தெம்பாக இருந்தான்.


சாப்பாட்டு நேரம் வந்தது. முதலாளியும் சாப்பிட வந்து அமர்ந்தார்.சோறு போட்டு, கறிக்குழம்பை பறிமாறினான் சமையல்காரன்.சாப்பிட ஆரம்பித்த அவர், கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தார்.மிகுந்த சுவையாக இருந்ததினால், அடுத்த காலையும் போடச் சொன்னார்.

திகைத்தான் சமையல்காரன். என்ன பேசுவது என்று ஒரு கணம் யோசித்தான்.பிறகு மனதைத் திடப்படுத்திக்கொண்டு, " ஐயா.....கொக்குக்கு ஒரு கால்தானே இருக்கும். நீங்கள் பார்த்ததில்லையா?...எப்படி இல்லாத ஒரு காலைக் கொண்டு வரமுடியும்" என்றான்.

அப்போது சமையல்காரனுடன் வாதிட விரும்பாத முதலாளி, " சரி நாளைக்குக் காலையில் கொக்குக்கு ஒரு கால்தானா? இல்லை இரண்டு கால்களா என்பதைப் பார்த்துக்கொள்வோம்" என்று கூறிவிட்டு உணவை முடித்தார்.

மறுநாள் காலையில், வேலைக்காரனை அழைத்துக்கொண்டு வயல் வெளிப்பக்கமாகப் போனார் முதலாளி. அங்கே குளக்கரைப்பக்கம் இருந்த ஒரு சிறு ஓடையில் கொக்குகள் நின்றிருந்தன.. சமையல் காரனிடம் கொக்குகளைக் காட்டிய முதலாளி " இப்போது நன்றாகப் பார். கொக்குக்கு எத்தனை கால்கள்" என்று கேட்டார்.

"இஅயா...நீங்களே நன்றாகப் பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரு காலில்தானே நிற்கின்றன.
எனவே கொக்குக்கு ஒரு கால்தான்" என்றான் சமையல்காரன்.

"அப்படியா" என்று சிரித்த முதலாளி, சூ....என்று கூறி கொக்குகளை விரட்டினார்.. ஒரு காலில் நின்றிருந்த கொக்குகள் எல்லாம், இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி வானத்தில் எழும்பிப் பறந்தன.

சமையல்காரனை கேலிப் புண்ணகையுடன் பார்த்த முதலாளி " இப்போது என்ன சொல்கிறாய். கொக்குக்கு எத்தனை கால்கள். ஒரு காலா.....அல்லது இரண்டு கால்களா?" என்றார்.

முதலாளி இப்படிக் கேட்டதும் ஒரு கணம் திகைத்த சமையல்காரன் தனது சாதுர்யமான பதிலைக் கூறியதும், முதலாளிக்கு சமையல்
காரன்மேல் இருந்த கோபம் எல்லாம் பறந்துபோனது.

அவனது பதிலை ரசித்துச் சிரித்த முதலாளி, அவன் செய்த தவறை மன்னித்தார்.

நண்பர்களே...................நீங்கள் கூறுங்கள். முதலாளிக்கு சமையல்காரன் என்ன பதில் கூறியிருப்பான்.?

புதிர் விடை :


"ஐயா.....இப்போது நீங்கள் கொக்கைப் பார்த்து சூ........ என்றதும் ஒரு கால், இரண்டு கால்களாக மாறியதே?...அதேபோல நீங்கள் உணவருந்தும்போதும் சூ என்று கூறியிருந்தால் ஒருகால் இரண்டு கால்களாக மாறியிருக்கும்" என்றான்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்