Monday, December 23, 2013

அரசனும் அவனது இரட்டை குழந்தைகளும் , அரியணை வாரிசு குழப்பமும் ! - புதிர் கதை

அரசனும் அவனது இரட்டை குழந்தைகளும் , அரியணை வாரிசு குழப்பமும் !

ஒரு அரசனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.. இரண்டுமே ஆண் குழந்தைகள்.  இருவரில் யார் மூத்தவன் யார் இளையவன் என்று யாருக்குமே தெரியாது.இருவருமே அறிவில் சிறந்தவர்களாக விளங்கவேண்டும் என்று அரசன் ஒருவனுக்கு அறிவழகன் என்றும் மற்றவனுக்கு மதியழகன் என்றும் பெயர் சூட்டியதோடல்லாமல், சிறந்த குருவிடம் அவர்களைக் கல்வி பயில ஏற்பாடு செய்தான். 

இருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, இளைஞர்கள் ஆனார்கள்.இருவருமே கல்வியிலும் வீரத்திலும் இனையாக சிறந்து விளங்கினார்கள். இவர்களில் யாருக்கு பட்டம் சூட்டுவது, தனக்குப் பின் அரியனையில் அமர்த்துவது என்று பெரிதும் சிந்தித்தான் அரசன்.அவனால் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.

அதனால் தனது மூத்த அமைச்சரை அழைத்தான். " அமைச்சரே, அறிவுள்ள நீங்கள்தான் எனது குழப்பம் தீர வழி காட்ட வேண்டும். இருவரில் யாரை அரியனையில் அமர்த்துவது என்று நீங்கள் ஆராய்ந்து கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.
அமைச்சர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

"அரசே.....இளவரசர் யார் என்பதைத் தேர்வு செய்யும் தகுதி உடையவர் எனது குநாதர்தான். அவர் இங்கிருந்து, பத்துக் கல் தொலைவில் உள்ள அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் தங்கி வாழ்ந்து வருகிறார். அவரிடம் உங்கள் முத்திரை மோதிரத்தைத் தருவோம்.அம்மோதிரத்தைப் பெற்று வறுமாறு இளவரசர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அனுப்பி வைப்போம்.என் குருநாதர் அவர்களின் புத்தி கூர்மையைச் சோதனை செய்து, தகுதியானவரிடம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து அனுப்புவார்.முத்திரை மோதிரத்தைக் கொண்டு வருபரே அரியனையில் அமரத் தகுதியானவர் என்று நாம் கொள்வோம்" என்றார்.


அரசனும் இத் திட்டத்தை ஏற்றுக்கொண்டான்.மதியழகனை அழைத்தார்.அவனிடம் விபரம் கூறி அமைச்சரின் குருவைச் சந்தித்து, அவரிடம் தான் கொடுத்துள்ள முத்திரை மோதிரத்தைப் பெற்று வரும்படி அனுப்பி வைத்தான்.

மதியழகன் அம்மன் கோவில், ஆயிரம் கால் மண்டபம் சென்றான். அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார். தனக்குத் தானே சிரித்துக்கொண்டு, ஏதேதோ பேசிக்கொண்டு அவர் இருந்தார். அவரிடம் சென்ற மதியழகன், " எங்கே அந்த முத்திரை மோதிரம். என்னிடம் கொடு . நான் அரசனின் மகன். முத்திரை மோதிரத்தை வாங்கிப் போவதற்காக வந்திருக்கிறேன்" என்றான்.

அங்கிருந்தவரோ சிரித்துக்கொண்டே , " இராவணின் கடைசி முகம்........வீட்டைத் தாங்கி நிற்கும்.........வேதத்தின் பெயர்......வேடன் கையில் இருப்பது......" என்று ஒன்றுக்கொன்று சம்பத்தம் இல்லாமல் கூறிக்கொண்டே இருந்தார்.

மதியழகன் எத்தனையோ முறை கேட்டபொதும், அவனுக்கு இந்த பதிலையே கிளிப்பிள்ளை கூறுவதுபோலக் கூறிக்கொண்டிருந்தார்.அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அரண்மனைக்குத் திரும்பினான். அரசர் கேட்டதற்கு, " அப்பா....அங்கே ஒரு பைத்தியக்காரந்தான் இருக்கிறான். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் எதோ உளறிக்கொண்டிருக்கின்றான்" என்றான்.

அரசன் அடுத்தாற்போல் அறிவழகனை அனுப்பிவைத்தார். அறிவழகன் அந்த ஆயிரம் கால் மண்டபத்தை அடைந்தான்."ஐயா முத்திரை மோதிரம் வேண்டும்" என்று கேட்டான்.அவனுக்கும் "இராவணின் கடைசி முகம்........வீட்டைத் தாங்கி நிற்கும்.........வேதத்தின் பெயர்......வேடன் கையில் இருப்பது......" என்று கூறினார். 

இதைக் கேட்ட அறிவழகன், இவர் கூறுவதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று ஊகித்தான்.அந்தப் பொருளைக் கண்டுகொண்டால், முத்திரை மோதிரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று புரிந்துகொண்டான்.தீவிரமாகச் சிந்தனை செய்தான்.முடிவில் முத்திரை மோதிரம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, மோதிரத்துடன் அரண்மனை வந்தடைந்தான். 

நடந்ததை அறிந்த அரசன் மிக்க மகிழ்வுடன், அறிவழகனையே இளவரசனாக பட்டம் சூட்டினான்.

நண்பர்களே மோதிரம் இருந்த இடத்தை அறிவழகன் எப்படிக் கண்டுபிடித்தான்.?

புதிர் விடை :


முனிவர் இருக்கும் இடத்தைத்தான் கூறியுள்ளார். அது ஆயிரம் கால் மண்டபமாதலால் அதிலிருந்த தூண் ஒன்றில் வைத்திருந்தார்.

இராவணனின் கடைசி முகம் - பத்தாவது
வீட்டைத் தாங்கி நிற்பது - தூண்
வேதத்தின் மற்றோர் தமிழ்ப்பெயர் - மறை
வேடனின் கையில் இருப்பது - வில்.

பத்தாவது தூண் மறைவில் இருந்தது முத்திரை மோதிரம்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்