Thursday, September 3, 2015

8 மாதமாக உயர்கிறது மகப்பேறுகால விடுமுறை

8 மாதமாக உயர்கிறது மகப்பேறுகால விடுமுறை


புதுடில்லி : வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களின் பேறுகால விடுமுறை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


விடுமுறை இல்லாத காரணத்தினால் பெண்கள் பலர் குழந்தை பிறந்த உடன், உடனடியாக வேலைக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு ஏற்படுவதுடன், குழந்தைக்கும் தாயின் அறவணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை மனதில் கொண்டு மத்திய அமைச்சர் மேனகா, வேலைக்கு செல்லும் பெண்களின் மகப்பேறு விடுமுறையை 3 மாதத்தில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்தார்.

இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கூடுதல் செயலாளர் நுதன் குகா பிஸ்வாஸ் கூறுகையில், தற்போதிருக்கும் 3 மாத மகப்பேறு விடுமுறையை 8 மாதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம். இந்த பரிந்துரையை பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். செயலாளர்கள் குழுவின் ஆலோசனைக்காக மத்திய அமைச்சரவை செயலகத்திடம் இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த 8 மாத விடுமுறை என்பது குழந்தை பிறப்பு நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விடுமுறை எடுக்க வழிவகை செய்யும். குழந்தை பிறந்த பிறகு 7 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். அமைச்சரவை செயலகம் ஒப்புதல் அளித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலகத்திடம் மட்டுமின்றி, அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் பேறுகால பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறையிடமும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்