Thursday, September 3, 2015

தீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

தீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?


தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று பலருக்கு தெரிவதில்லை. உடனே தீயை அணைக்க வேண்டும் என்பதற்காக, என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் பதற்றத்தில் செய்து விடுவர். பாதிப்பு என்பது, எப்பேர்ப்பட்ட தீ விபத்து என்பதை பொறுத்தது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெயால் தீப்பற்றி இருந்தால் அதன் பாதிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அதே போல் தீப்பற்றும் போது அணிந்திருக்கும் ஆடையும், பாதிப்பின் தீவிரத்தை முடிவு செய்கிறது. சரி, தீப்பற்றிக் கொண்டால் என்னதான் செய்ய வேண்டும்? 


துணியில் தீப்பற்றிக் கொண்டால், அங்குமிங்கும் ஓடக்கூடாது. உடனே நின்று, உடைகளை களைந்து, தீ அணையும் வரை, மண்ணில் உருளவும்; கம்பளி போன்ற கனமான போர்வையை உடலில் சுற்றி, தீயை அணைத்து விட வேண்டும். ஓடினால், தீ இன்னும்  பரவும் வாய்ப்பு உள்ளது. மூடிய கதவுகளை திறக்கும் முன்பு, அவற்றின் வெளிப்புறத்தில், தீ பற்றாததை உறுதிபடுத்திகொள்வது அவசியம்.

அவசரத்தில் கதவை திறக்க நேரிட்டால், கதவின் தாழ்ப்பாள் விரிசல்களில், தங்கள் பின்னங்கையை வைத்து, பார்த்து சோதிக்கலாம். வெப்பத்தை அறிய உள்ளங்கையை பயன்படுத்தாதீர்கள். உள்ளங்கையில் சூடு பட்டுவிட்டால், தவழ்ந்து செல்லவோ, ஏணியில் ஏறிச்செல்லவோ முடியாமல் போய்விடும்.  வீட்டுக்கு வெளியே வந்தபின், மீண்டும் உள்ளே போகாமல், தீயணைப்பு வீரர்களை உடனே அழைப்பது புத்திசாலித்தனமாகும். சிறிய தீயை அணைக்க, அவசர காலத்திற்கு, சமையல் சோடாவை பயன்படுத்தலாம். 

புகையானது, விட்டத்தை நோக்கி பரவுவதால், புகையுணர்வு கருவியை, உயரமான இடத்தில் பொருத்துவது நல்லது. புகை எச்சரிக்கை கருவி, பத்து ஆண்டுகளுக்கு மேல் பழுதாகிவிட்டால், புதிய கருவியை வாங்கி உபயோகிப்பது நல்லது. 

தீ விபத்து நேர்ந்தால், அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு, உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இத்துறைகளின் தொலைபேசி எண்களை, தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். தீ விபத்து நேர்ந்த இடத்தின், தெளிவான முகவரியையும், விரைவாக வந்து சேர சரியான வழியையும் தெரிவிக்கவும். தீயணைப்பான் எச்சரிக்கை மணி கேட்டதும், வழி ஏற்படுத்தி கொடுக்கவும்.

தீயணைப்பு படை, நெருப்பை அணைக்கப் போராடும் போது, அவர்களை தொல்லை செய்யாதீர்கள். மக்கள் நெரிசல் அதிகரித்தால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தடைபடும். தீ விபத்து நேர்ந்தால், கூச்சலிட்டு மற்றவர்களின் உதவியை நாடுவது நல்லது. விபத்திற்குள்ளான நபர்களை, உடனடியாக மருத்துவ உதவிக்காக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவசியம். பாதுகாப்பும், எச்சரிக்கையும் மட்டுமே, தீ விபத்திலிருந்து பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்