Saturday, December 14, 2013

நோக்கியா: வளர்ச்சியும் வீழ்ச்சியும்

 நோக்கியா: வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கையடக்கத் தொலைபேசி உலகில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னனாக திகழ்ந்த நோக்கியா நிறுவனத்தை, மென்பொருள் தொழிலில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் மைக்ரோசாப்ட் 720 கோடி டாலர் (சுமார் ரூ.48,000 கோடி) கொடுத்து சொந்தமாக்கியுள்ளது. பின்லாந்து நாட்டை தலைமையகமாக கொண்ட நோக்கியா நிறுவனம் எவ்வளவு வேகத்தில் சிகரத்தை எட்டியதோ அதே வேகத்தில் யாரும் எதிர்பாரத வகையில் பெரும் சரிவையும் சந்தித்துள்ளது. இதன் பின்னணியை ஆராயும்போது கிடைக்கும் தகவல்கள் சுவாரசியமானவை.

வர்த்தக ரீதியில் கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் நோக்கியா. அதன் தயாரிப்புகள் எளிதில் கையாளும் வகையிலான வடிவமைப்பையும் இயக்கத்தையும் கொண்டிருந்தது. முக்கியமாக நோக்கியா போன்களின் ரகங்களும் விலையும் அவரவர் வசதிக்கு தேர்ந்தெடுக்கும் விதத்தில் இருந்தன. 1990களில் நோக்கியாவுக்கு போட்டியாக பெரிய நிறுவனம் எதுவும் இல்லை. செல்போன் கடைக்கு செல்பவர்கள் பிராண்ட் பெயரை சொல்லாமலே 3210 கொடுங்கள், 1100 இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நோக்கியா மாடல்கள் பிரபலமாயின. 2000ம் ஆண்டில் 3310/3330 மாடல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. அந்த இரு மாடல்களும் சுமார் 13 கோடி விற்பனை ஆயின என்றால் பாருங்கள்.

ஸ்மார்ட்போன் அறிமுகமான நேரத்தில் 2002ல் 3650 என்ற மாடல் விற்பனைக்கு வந்தது. செம்பியன் சீரிஸ்60 வரை வந்தது. ஆனால், வட்டவடிமான கீபேடு மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. 2003ல் நோக்கியாவின் முதலாவது 3ஜி கையடக்கத் தொலைபேசி (7600 மாடல்) அறிமுகம் ஆனது. இது பேஷன் சீரிஸில் ஒரு பகுதி. ஆனால், இதன் வடிவமைப்பு எடுபடவில்லை. இதேபோல் 2003ல் வந்த என்,கேஜ் மாடலும் கைகொடுக்கவில்லை. குறைந்த அளவு கேம்ஸ், டல்லான வடிவமைப்பு மக்களை கவரவில்லை.

உச்சத்தில் இருந்த நோக்கியாவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாறிக் கொண்டே இருந்தது. எளிமையான கையால்தல் மட்டுமே செல்போனின் இலக்கணம் ஆகாது என்று உணர்த்தும் வகையில் அழகான, கவர்ச்சியான, புதுமையான செல்போன் மாடல்களை சந்தைக்கு கொண்டு வர தொடங்கியது தென்கொரியாவின் சாம்சங். 2007ல் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது.

யாரும் தொட முடியாத சந்தைப் பங்கு இருந்ததால் விளம்பரம் செய்வதிலும் நோக்கியா ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சாம்சங்கும் ஆப்பிளும் புதிய விளம்பர உத்திகளை கையாண்டன. அதையடுத்து, 2007ல் ஸ்மார்ட்போன் சந்தையில் 49.4 சதவீதமாக இருந்த நோக்கியாவின் ஆதிக்கம், அடுத்த ஆண்டுகளில் 44, 41, 34 என்று தொடர் சரிவை சந்தித்தது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதல பாதாளத்தில் விழுந்து 3 சதவீதம் ஆனது.

நேர்த்தியான செல்போன் தயாரித்த நோக்கியாவால், போட்டியாளர்கள் அளவுக்கு வேகமான இயக்க முறை மென்பொருளை இணைத்து அளிக்க இயலவில்லை. மென்பொருளில் கவனம் செலுத்த தவறியதால் ஹார்ட்வேர் முக்கியத்துவம் இழந்து பின்தங்கியது. எனவே, 3ஜி உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப செல்போன்களை வாங்க விரும்பிய மக்கள், நோக்கியா பக்கம் திரும்பவில்லை.

டுயல் சிம் எனப்படும் இரட்டை சிம் கார்டு போன்களை மக்கள் விரும்பி வாங்குவது தெரிந்தும் நோக்கியா சமீபகாலம் வரை அதில் ஆர்வம் காட்டவில்லை. மக்களின் விருப்பங்களும் தேவைகளும் மாறி வருவதை நோக்கியா உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டது. அந்த சூழ்நிலையில், 2011ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் மென்பொருளை நோக்கியா தனது போன்களில் ஆபரேடிங் சிஸ்டமாக அறிமுகம் செய்தது.

எனினும், கூகுள் நிறுவனத்தின் இலவச ஆபரேடிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்பாடு அதற்குள் மிக உயர்ந்த இடத்தை தொட்டிருந்தது. இன்னொரு பக்கம் ஆப்பிளின் ஐஓஎஸ் ஆபரேடிங் சிஸ்டமும் தனிப்பெயர் பெற்றிருந்தது. எனவே, இழந்த சந்தைப் பங்கை நோக்கியா மீட்க முடியவில்லை.

இந்த நேரத்தில் நோக்கியாவின் புதிய தயாரிப்புகளான லூமியா போன்கள் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் சிறப்பாக செயல்படுவதாக தகவல் பரவி பல நாடுகளிலும் விற்பனை விறுவிறுப்பானது. அதை தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தை கையகப்படுத்தும் யோசனைக்கு மைக்ரோசாப்ட் வடிவம் கொடுத்தது. ஹார்டுவேர், சாப்ட்வேர் இணையும் பந்தம் இருவருக்கும் நன்மை தரும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் நம்புகிறார்.

வரலாறு திரும்புகிறது

முக்கிய நிகழ்வுகள் பலவற்றுக்கு அற்ப விஷயங்கள் காரணமாக இருந்ததை வரலாற்றில் பார்க்கலாம். வெறும் 5 ஷில்லிங் நாணயத்துக்காக தொடங்கிய பயணம் கிரேட் பிரிட்டனுக்கு உலகின் மிகப்பெரிய காலனி ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அப்போது வாசனைத் திரவிய வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய டச்சு வியாபாரிகள் மிளகின் விலையை ஒரு பவுண்டுக்கு 5 ஷில்லிங் உயர்த்தினர். இதை அநியாயம் என்று லண்டன் வியாபாரிகள் கருதினர்.

அவர்களில் 24 பேர் ஒரு மாளிகையில் கூடினர். அது 1599 செப்டம்பர் 24. 125 பங்குதாரர்களை சேர்த்து 72,000 பவுண்ட் மூலதனமாக போட்டு கம்பெனி ஆரம்பித்தனர். கிழக்கிந்திய கம்பெனி. அதன் முதல் கப்பல் 1600ல் இந்திய கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சியது. மன்னர் ஜஹாங்கீர் தன் தர்பாரில் ஆங்கிலேய வியாபாரிகளை வரவேற்றார். அன்று விழுந்த விதை இந்தியாவை 340 ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்தும் அளவுக்கு வளர்ந்தது வரலாறு.

2010ல் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி எலூப் பதவி விலகினார். நோக்கியா நிறுவனத்தில் சேர்ந்தார். நோக்கியாவுக்கு மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வழங்கத்தொடங்கியது. நோக்கியா நிர்வாகத்தில் பல மாற்றங்களை எலூப் கொண்டுவந்தார். 65 ஆயிரம் ஊழியர்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுகளில் பாதிப்பேரை வெளியேற்றினார். இதே காலகட்டத்தில் நோக்கியா போன்களின் விற்பனை தரைமட்டம் ஆனது. இழப்பு அதிகரித்தது. இதையடுத்து, நிறுவனத்தை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. எலூப் மீண்டும் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்