Friday, January 3, 2014

அரசனின் தங்க கட்டிகளும் அதை திருடிய தொழிலாளியும்

முன்னொரு காலத்தில் ஒரு குட்டித் தீவிலே தங்கம் ஏராளமாகக் கிடைத்தது.நூற்றுக்கணக்கானோர் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தார்கள்.

அவர்கள் தோண்டியெடுத்து அனுப்பும் தங்கக் கனிமத்தை, பத்து ஆட்கள் உலையில் இட்டு உருக்கி வார்ப்படமாகச் செய்து நூறு கிராம் கட்டிகளாக மாற்றி அந்தத் தீவை ஆண்டு வந்த அரசன் கருவூலத்துக்கு அனுப்பி வந்தார்கள்.


ஒரு நாள் அரசன் தீவைப் பார்வையிட வந்தான்.
பகல் முழுவதும் தங்கச் சுரங்கத்தைச் சுற்றிப் பார்த்தான். பிறகு மாலை நேரம் தங்கத்தை உருக்கி வார்ப்படம் செய்யும் ஆலைக்குச் சென்று பார்வையிட்டான். அங்கு வேலை செய்த ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு பத்து தங்கக் கட்டிகளை வார்த்துக்கொண்டிருந்தார்கள்.வார்ப்பு வேலை முடிந்ததும் அவர்கள் வார்த்த கட்டிகளைக் கொண்டுவந்தார்கள்.ஒரு அதிகாரி தங்கக் கட்டிகளை அங்கிருந்த தராசில் எடைபோட்டு எடுத்துக்கொண்டிருந்தான்.அனைத்தையும் பார்வையிட்ட அரசன் பிறகு தனது உல்லாச மாளிகைக்குச் சென்றான்

இரவு உணவை முடித்ததும், பக்கத்தில்; இருந்த நந்தவனம் ஒன்றில் மெல்லிய தென்றலை ரசித்தபடியே, வானத்து நட்சத்திரங்கள் மகிழ்வுடன் பார்த்துக்கொண்டிருந்தான். 

அப்போது...அங்கிருந்த ஒரு மரத்தடியில் இரண்டு ஆட்கள் நிற்பதைப் பார்த்தான் அரசன்.

அவர்கள் அரசன் அங்கிருப்பதைக் கவனிக்காமல் எதோ பேச அரம்பித்ததும், அவர்கள் பேசுவதை அரசன் கவனமுடன் கேட்க ஆரம்பித்தான்.

ஒருவன் :- இதோ பார் நண்பா..இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி நாம் உழைத்து உழைத்து உருக்குலைந்து போவது.?வாய்ப்பு இருக்கும்போதே நாமும் கொஞ்சம் சுருட்டினால்தான் இந்த உலகத்தில் வாழமுடியும்..

மற்றவன் :- சரி.........நீ கூறுவதை ஒத்துக்கொள்கிறேன். இங்கே ஏகப்பட்ட கண்காணிப்பு இருக்கிறது. நாம் எப்படி தங்கத்தைத் திருடுவது?

ஒருவன் :- அதற்கு நான் ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்துள்ளேன். அதன்படி செய்தால் நாம் தங்கம் திருடுவதை யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது!

மற்றவன் :- அப்படியா!!!!. அது என்ன வழி???? 

ஒருவன் :- கவனமாகக் கேட்டுக்கொள். இங்கே உள்ள தராசு அவ்வளவு ஒன்றும் துல்லியமானது இல்லை. அதனால் இன்றுமுதல் நாம் வார்த்தெடுக்கும் தங்கக் கட்டியில் ஒரே ஒரு கிராம் தங்கம் மட்டும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். மீதியாகும் அந்த ஒரு கிராம் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தால் முடிவில் நமக்கு நிறையத் தங்கம் கிடைத்துவிடும்.எப்படி எனது யோசனை????

மற்றவன் :- ஆஹா......அருமையாக இருக்கின்றது.

ஒருவன் :- எனக்குத் தெரியும் நீ ஒத்துக்கொள்வாய் என்று. இந்த வழியை நான் நாளை முதல் தொடங்கப் போகிறேன்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசன், அந்த ஆட்கள் யாரென்று தெரிந்தால், அவர்களை உடனே கைது செய்து தீவைவிட்டு வெளியேற்றிவிடலாம் என்று நினைத்தபடியே,  ஏய்.......யார் நீங்கள்.......என்று சப்தம் கொடுத்தபடியே காவலர்களையும் அழைத்தான்.

அரசனது குரல் கேட்டதும் அந்த இருவரும் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள்.
அரசன் இந்தப்பிரச்சினைக்கு எப்படியாவது தீர்வு கானவேண்டும் என்று சிந்தனை செய்தான்.

தனது குல தெய்வத்தை தியானம் செய்தான். உடனே அவன் முன்னால் தோன்றிய குல தெய்வம், அரசனது பிரச்சினையைக் கேட்டதும், அரசனே......உனது பிரச்சினைக்கு தீர்வு ஒரு துல்லியமான தராசுதான். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் முறையில் கண்டுபிடிக்கப்பட உள்ள ஒரு தராசை இன்று உனக்கு அளிக்கிறேன். அதை வைத்து நீ தங்கக் கட்டியை எடைபோட்டு யார் உன்னை ஏமாற்ற எண்ணியுள்ளார்கள் என்று தெரிந்துகொள். என்றது.

அரசன் மிகவும் மகிழ்ந்தான். 
மிக்க நன்றி தெய்வமே என்றான்.

ஆனால் ஒரு விஷயம் என்ற தெய்வம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துதான் இது இந்தப் பூமியில் கண்டு பிடிக்கப்பட உள்ளது. அதனால் நான் இந்தத் தராசை ஒரே ஒரு முறை நிறுவையிடத்தான் உனக்கு கொடுக்கிறேன். நீ எவ்வளவு சுமை வேண்டுமானாலும் ஒரே தடவையில் நிறுத்துக்கொள்ளலாம்.மொத்த் சுமையையும் தராசுத் தட்டின்மேல் வைத்து பிறகு என்னைத் தியானம் செய்தால் , நீ வைத்துள்ள சுமையின் எடை என்ன என்பதை மிகத் துல்லியமாக இந்த தராசு காட்டும். அவ்வளவுதான் தராசு அங்கிருந்து மறைந்துவிடும்.................................நீ உனது புத்தியை உபயோகித்து தங்கக் கட்டிகளை எடைபோட்டுப் பார்த்து, யார் மோசடி செய்கிறார்கள் என்று கண்டு பிடித்துக்கொள் என்றது.

மறுநாள் மாலை . தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் வார்ப்படம் செய்த கட்டிகளைக் கொண்டு வந்தார்கள்.

அரசன் புத்திசாலித் தனமாக தராசை ஒரே ஒருமுறை உபயோகித்து மோசடிக் காரனைக் கண்டு பிடித்துக் கைது செய்தான்.

மன்ற நண்பர்களே....இப்போது உங்களுக்கான கேள்வி!!!

அரசன் எப்படி மோசடிக்காரனைக் கண்டுபிடித்தான்?

புதிர் விடை :

பேசியவர்களில் ஒருவன் மட்டுமே அடுத்த நாள் தங்கம் வார்ப்பவர்களில் இருக்கிறான் என்று எடுத்துக்கொண்டால்.....!     

அடுத்த நாள் தங்கம் வார்த்த 10 பேரையும் வரிசையாக நிற்க வைத்து
முதலாமவன் வார்த்த தங்கத்தில் ஒன்றும் இரண்டாமவன் வார்த்த தங்கத்தில்
இரண்டு இப்படியே வரிசையாக 3,4,5,6,7,8,9 இறுதி ஆள் வார்த்த முழு  கட்டிகளையும் வேண்டி
மொத்தமாக 1 முறை நிறுத்தாலே போதும் தப்பு பண்ணியவன் மாட்டிக்கொள்வான்.

உதாரணம் :- நிறுக்க  எடுத்துக்கொண்ட கட்டிகளின் எண்ணிக்கை 55 , ஒரு கட்டி 100 g 5.5 kg இதில் 3 g குறைந்தால் தப்பு பண்ணியவன் 3ம் ஆள்......5g குறைந்தால் தப்பு பண்ணியவன் 5ம் ஆள்..........

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்