Saturday, January 4, 2014

காட்டின் ராஜா சிங்கமும் ஒரு முயலும் - புதிர் கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.கரடி,குரங்கு மற்றும் முயல் மூன்றும் அதற்கு அமைச்சர்களாக இருந்ததன. அந்தச் சிங்கம் எந்த அநியாயம் செய்தாலும், அதை நியாயமாகச் செய்வது போலவே காரணம் காட்டிச் செய்து வந்தது. 

ஆண்டுகள் சென்றன. சிங்கத்துக்கு வயதாகிவிட்டது. அதனால் இரை தேடிச் செல்ல இயலவில்லை. அதனால் ஏதாவது காரனம் கட்டி ஒவ்வொரு அமைச்சர்களாகக் கொன்று தின்றுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டது. 


முதலில் கரடியை அழைத்தது. அதனிடம், என் வாய் எப்படிப்பட்ட மணம் வீசுகின்றது.?நான் நன்றாக வாயைத் திறக்கின்றேன். என் வாயின் அருகே உன் மூக்கை வைத்து முகர்ந்து பார்!. என்ன மணம் வருகிறது என்று சொல் என்றது.

சிங்கத்தின் சூழ்ச்சியை அறியாத கரடி சிங்கத்தின் வாய்க்கருகில் தனது முகத்தைக் கொண்டு சென்றது.சிங்கம் வாயைத் திறந்தது முகர்ந்து பார்த்தது.சிங்கம் எப்போதும் இறைச்சியையே சாப்பிடுவதால் அதன் வாயில் இருந்து கெட்ட நாற்றம் வீசியது. அதனால் கரடி, அரசே! தங்கள் வாயில் இருந்து கெட்ட நாற்றம் வீசுகின்றது.என்னால் தாங்க இயலவில்லை என்றது.

கோபத்துடன் சிங்கம் எல்லோரும் புகழும் அரசனாக விளங்கும் எனது வாய் கெட்ட நாற்றம் வீசுகின்றது என்று எப்படிச் சொல்லலாம்.உனக்கு என்ன துனிச்சல்?என்னையே குறை கூறுகிறாயா என்று கூறியபடியே பாய்ந்து கரடியைக் கொன்றது.

சில தினங்களுக்கு சிங்கம் கரடியைச் சாப்பிட்டு பசியைத் தீர்த்துக்கொண்டது.

மேலும் சில தினங்கள் கடந்தன.அடுத்தாற்போல் குரங்கை அழைத்தது.கரடிக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்திருந்த குரங்கு நடுங்கியபடியே சிங்கத்தின் அருகே சென்றது. சிங்கம் தனது வாயைத் திறந்து குரங்கை முகர்ந்து பார்த்துக் கூறும்படி கட்டளையிட்டது.

குரங்கும் முகர்ந்து பார்த்தது. தான் உயிர் பிழைக்கவேண்டுமானால் பொய் கூறுவதில் தப்பில்லை என்று நினைத்த குரங்கு,அரசே----என்னே இனிய மணம். இதுபோன்ற நறுமணத்தை நான் இதுவரை முகர்ந்ததே இல்லை என்றது.

உடனே சிங்கம், குரங்கே---நான் பச்சை இறைச்சியைச் சாப்பிடுகின்றேன்.பல் விளக்குவதே கிடையாது. இப்படிப்பட்ட எனது வாயில் எப்படி நறுமணம் வரமுடியும். அரசனான என்னிடமே பொய் பேசுகின்றாயா?உன்னை என்ன செய்கிறேன் பார்--- என்றபடியே குரங்கை ஒரே அடியில் அடித்து சில தினங்களுக்குப் பசியைத் தீர்த்துக்கொண்டது,

மேலும் சில நாட்கள் கழிந்தன. மறுபடியும் சிங்கத்துக்குப் பசியெடுத்தது. இப்போது முயலை அழைத்தது. முயல் புத்தி கூர்மை கொண்டது. கரடிக்கும், குரங்குக்கும் நேர்ந்த கொடுமைகளைக் கண்டிருந்ததால் தான் என்ன பதில் கூறவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டது.?

சிங்கத்தின் வாயை முகர்ந்த முயல் தான் தீர்மானித்தபடியே கூறியது. அதைக் கேட்ட சிங்கத்தால் எந்தக் காரணம் கூறியும் முயலைக் கொல்ல இயலவில்லை. 

அப்படியானால்----முயல் என்ன பதில் கூறியிருக்கும்?

புதிர் விடை :-

"ராஜா! எனக்கு சளி பிடித்து மூக்கு அடைத்துள்ளது. அதனால் நான் தங்கள் வாயின் மணம் எப்படி என்று கூற இயலவில்லை" என்றது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்