Saturday, January 4, 2014

ராமு மற்றும் சோமுவின் பந்தயம் - புதிர் கதை

ராமு சோமு இருவருமே கட்டிடத் தொழிலாளிகள்.ஒரே இடத்தில் வேலை செய்தார்கள். அன்று விடுமுறை தினமானதால் வேலை எதுவும் நடைபெறவில்லை.

அவர்களின் கட்டிடப் பணி நடந்துகொண்டிருந்த இடத்துக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு மைதானத்தில் ராமுவும் சோமுவும், மாலை நேரத்தில், பலவிஷயங்களைப் பேசியபடியே காலாற நடந்துகொண்டிருந்தார்கள்.


பேச்சு வாக்கில் தான்தான் அறிவாளி என்பதுபோல ராமு பேசினான்.சோமு அதை ஒத்துக்கொள்ளவில்லை.ஏதாவது ஒரு போட்டி வைத்துக்கொள்வது.. அதில் யார் வெல்கிறார்களோ அவர்களே அறிவாளி என்று மற்றவன் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அங்கிருந்த ஒரு சிறிய , மணல் அள்ளிப்போட்டுத் தள்ளிச் செல்லும் கைவண்டி ஒன்றைப் பார்த்த ராமு,  இதோ பார் சோமு-----இந்த தள்ளு வண்டியை எடுத்துக்கொள்வோம்.இதில் ஏதாவது ஒன்றை வைத்து, இங்கிருந்து இந்த மைதானத்தின் எல்லைவரை தள்ளிக்கொண்டு சென்று திரும்பவேண்டும். வண்டியில் வைக்கப்படுவது கீழே விழாமலும், அதே சமயம் வேகமாகவும் யார் வருகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். பந்தயம் நூறு ரூபாய். சம்மதமா? என்று கூறினான்.

சிறிது நேரம் ஆலோசனை செய்த சோமு அதற்கு ஒத்துக்கொண்டான். ஆனால் நான்தான் வண்டியை முதலில் தள்ளிச் செல்வேன் என்றான். அத்துடன் வண்டியில் எதை வைத்துத் தள்ளிச் செல்வது என்பதையும் தானே தேர்ந்தெடுத்துக்கொள்வதாகக் கூறினான்.

கொஞ்சம் கூட தாமதிக்காமல் ராமு அதற்கு ஒத்துக்கொண்டு, சோமுவை போட்டியை ஆரம்பிக்கும்படி கூறினான். போட்டியை சோமு ஆரம்பித்தான்.

வண்டியில் தான் விருப்பப்பட்டதை வைத்து, மிக மிக மெதுவாகச் சோம்பல் முறித்தபடியே, தள்ளிக்கொண்டு மைதானத்தின் விளிம்புவரை சென்று திரும்பினான்.இடை இடையே நீண்ட நேரம் வண்டியை நிறுத்தி வைத்தான்.இதைவிட மெதுவாக யாருமே வண்டியைத் தள்ள முடியாது என்பதுபோல சோமு வண்டியைத் தள்ளினான். ஆனால் போட்டியோ யார் வேகமாகத் தள்ளுவார்கள் என்பதுதான். ஆனால் அதைப் பற்றி சோமு கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அடுத்து ராமுவின் முறை. சோமுவை ஏற இறங்கப் பார்த்த ராமு , தான் தோற்றுவிட்டதாகக் கூறி பந்தயப் பணமான நூறு ரூபாயை பேசியபடியே சோமுவிடம் கொடுத்தான்.

நண்பர்களே-----சோமு வண்டியை மிக மெதுவாக தள்ளிச் சென்று திரும்பியும், ராமு பந்தயத்தில் கலந்து கொள்ளாமல், தோல்வியை ஏன் ஒப்புக்கொண்டான்? கூறுங்களேன் !

புதிர் விடை :-

சோமு கைவண்டியில் ஏற்றிக்கொண்டதே ராமுவைத்தான்.... .ராமு ஒல்லியான உருவம் கொண்டவனாக இருந்திருப்பான்.. ஆனால் சோமுவோ மிகவும் குண்டான உருவம் கொண்டவனாக இருந்திருப்பான்.  அவனை துக்கி அந்த வண்டியில் உக்கார வைக்க ராமுவால் கண்டிப்பாக முடிந்திருக்காது என்ற காரணத்தால் ராமு தன் தோல்வியை ஒத்துக்கொண்டிருப்பான்... இரண்டாவதாக எப்படி அவனே அவனை (ராமுவே ராமுவை )வண்டியில் ஏற்றி தள்ளவும் முடியும்???

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்